சென்னை மாநகரில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைவெள்ள பாதிப்பு மீட்பு பணிகள் குறித்து மாநகர ஆணையர் ககன்தீப் சிங் பேடி ரிப்பன் மாளிகையில் ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “சென்னையில் நேற்று கனமழை பெய்ததில் 50-60 விழுக்காடு மழை நீர் நேற்றே (நவ.07) வடிந்து விட்டது.
317 பகுதிகளில் நேற்று (நவ.07) நீர் தேங்கியிருந்த நிலையில் 140 இடங்களில் முழுமையாக தண்ணீர் அகற்றப்பட்டுவிட்டது. 177 இடங்களில் மட்டும் தற்போது தண்ணீர் தேங்கியுள்ளது. கொரட்டூர், மாம்பலம் பகுதியில் நீரின் அளவு குறைந்துள்ளது.
கனமழையை எதிர்கொள்ள மாநகராட்சி தயார்
மேலும் பல இடங்களில் நீர் முழுமையாக அகற்றப்படும். அதேபோல் ஒரே நாளில் மாநகராட்சி மூலம் மொத்தம் 7 லட்சத்துக்கு 16 ஆயிரம் பேருக்கு உணவு வழங்கப்பட்டுள்ளது. மாநகராட்சி சார்பில் 58 இடங்களில் தங்கும் இடங்களும் அமைக்கப்பட்டுள்ளன.
அதுமட்டுமின்றி மாநகராட்சியின் 16 சுரங்கப்பாதையில் 2 தவிர மற்ற இடங்களில் நீர் அகற்றப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு விடப்படும். 10, 11 தேதிகளில் அதிக மழைப்பொழிவு இருக்கும் என்று கூறியுள்ள நிலையில், அதனை எதிர்கொள்ள மாநகராட்சி தயாராக உள்ளது. மக்கள் அச்சப்பட தேவையில்லை.