கரோனா வைரஸ் வேகமாக பரவி நாடு முழுவதும் பலரது உயிர்களை பறித்துள்ளது. இந்தக் கரோனா யுத்தத்தில் அதை எதிர்த்து போரிடுபவர்களில் மிக முக்கியமானவர்கள் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள். ஆனால், இந்தத் தொற்று அவர்களையும் விட்டுவைக்கவில்லை. இதுவரை மாநிலம் முழுவதும் 10க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் இப்பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் இதுவரை கரோனாவிற்கு 2 மருத்துவர்கள் உயிரிழந்த நிலையில், கடந்த வாரம் இந்நோய்க்கு முதலாவதாக உயிரிழந்த மருத்துவரின் உடலை அம்பத்தூரில் தகனம் செய்ய முயன்ற போது, அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். கரோனா தொற்றியவரின் உடலை இங்கு தகனம் செய்யக்கூடாது என போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதனையடுத்து வேறு ஒரு இடத்தில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது. இதேபோல் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனளிக்காமல் நேற்று (ஏப்ரல் 19) உயிரிழந்த மற்றொரு மருத்துவரின் உடலை அடக்கம் செய்ய சென்றபோதும், அப்பகுதியினர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து, காவல்துறை பாதுகாப்புடன் வேறொரு இடத்தில் மருத்துவரின் உடல் புதைக்கப்பட்டது. இந்நிகழ்வில் அரசு ஊழியர்களின் பணிக்கு இடையூறு ஏற்படுத்தியதாக சிலரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.