சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் ஒரு நாளைக்கு ஐந்தாயிரம் மெட்ரிக் டன் குப்பைகள் உருவாகின்றன. இதில் மக்கும், மக்காத குப்பைகள் பிரிப்பதில் பல நிலைகள் இருந்துவருகின்றன. குப்பைகளைக் குறைக்கவும், வேலை வாய்ப்புகளை உருவாக்கவும் 'மெட்ராஸ் வேஸ்ட் எக்சேஞ்' என்கிற பெயரில் பிரித்தெடுக்கப்பட்ட திடக்கழிவுகளிலிருந்து பெறப்படும் மறு பயன்பாடு உள்ள பொருள்கள் இருக்கும் இடம், அவற்றின் அளவு ஆகியவற்றை பொதுமக்களுக்கு தெரியப்படுத்தும் படியான செயலி உருவாக்கப்பட்டுள்ளது.
இதனை அறிமுகப்படுத்திய சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கூறுகையில், "அதிக அளவில் மக்காத குப்பைகளை உணவகம் போன்ற பெரிய நிறுவனங்கள் உருவாக்குகின்றன. தினமும் 500 முதல் 800 மெட்ரிக் டன் வரை மக்காத குப்பைகள் உருவாகின்றன. மைக்ரோ கம்போசிடிங் மையங்கள் 200 இருந்தாலும் அவை மேலும் அதிகப்படுத்தப்பட உள்ளோம். 'மெட்ராஸ் வேஸ்ட் எக்சேஞ்' கம்போசிடிங் மையங்கள் குறித்த விவரங்கள் இதில் கிடைக்கிறது.
உதாரணமாக தாள்கள் குறைந்தது 50 முயல் 500 கிலோ வரை விற்பனை செய்ய வேண்டும் என நினைத்தால் இங்கு விவரங்களுடன் பதிவிட்டால் அவை எடுத்துக்கொள்ளப்படுகிறது. தெர்மாகோல் போன்றவை இப்போது குப்பையாக பார்க்கப்படுவதில்லை, மாறாக வேறு பயன்பாடுகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது.
அதேபோல் இந்த இணையத்தில் யார் யாரிடம் என்ன மாதிரியான பயனற்ற பொருள்கள் உள்ளது. அவற்றை எவ்வாறு எடுத்துக்கொள்ளலாம் என்கிற அனைத்து விவரங்களும் உள்ளன. இதனால் ஒவ்வொரு வீடுமே ஒரு சிறிய அளவிலான விற்பனை மையங்களாக மாற வாய்ப்புள்ளது. யாருக்கு என்ன மாதிரி பொருள்கள் தேவையோ அவற்றை தேடி எடுத்துக்கொள்ள முடியும்.
இதனால் எதிர்காலத்தில் வீடுகள், பிற நிறுவனங்களில் உற்பத்தி செய்யப்படும் குப்பைகளின் அளவு குறைய அதிக வாய்ப்புள்ளது. விற்பனை செய்பவர்கள், வாங்குபவர்கள் என அனைவரும் இந்த இணையத்தில் பதிவு செய்துகொள்ள முடியும். மேலும், நேரடியாகவும் மறைமுகமாகவும் ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாகும்.
’மெட்ராஸ் வேஸ்ட் எக்சேஞ்' சென்னைக்கு புதிய திட்டம் சென்னையில் 2250 காயிலாங்கடைகள் எனச் சொல்லப்படும் பழைய இரும்புப் பொருள்கள் விற்பனை செய்யும் கடைகள் உள்ளன. அவர்களும் இந்தத் தொழில்நுட்ப வசதியைப் பயன்படுத்தி நல்ல முன்னேற்றம் அடைய முடியும். இவையெல்லாம் தாண்டி மாநகராட்சி தினந்தோறும் எடுக்கும் குப்பைகளின் அளவு வெகுவாகக் குறைய வாய்ப்புகள் அதிகம் ஏற்பட்டுள்ளது என்பது வரவேற்கத்தக்கது. இதற்காக உருவாக்கப்பட்ட செயலி மூலம் யாரும் விற்பனை மற்றும் வாங்குவோர் என பதிவு செய்துகொள்ள முடியும்" எனத் தெரிவித்தார்.
இதையு படிங்க:‘அடுத்தாண்டு கட்சி தொடங்குவது நிச்சயம்’ - ரஜினியின் சகோதரர்