சென்னை:சென்னை புதுவண்ணாரப்பேட்டையில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பயின்று வருகின்றனர். இந்நிலையில் கல்லூரி முடிந்து திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் உள்ள லட்சுமி கோவில் பஸ் நிறுத்தத்தில் மாணவிகள் பேருந்துக்காக காத்திருந்தனர்.
அப்போது அங்கிருந்த இரு கல்லூரி மாணவிகளுக்கு இடையே திடீர் வாக்குவாதம் ஏற்பட்டு இருவரும் சாலையிலேயே குடுமிப்பிடி சண்டை போட்டுக்கொண்டனர். மேலும் இரு மாணவிகளின் தோழிகளும் மாறி மாறி அடித்துக் கொண்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பொதுமக்களும், மற்ற கல்லூரி மாணவர்களும் சண்டையை தடுக்க முயன்றும் சண்டையிட்ட மாணவிகள் தொடர்ந்து சண்டையிட்டு கொண்டிருந்தனர்.
இதனையடுத்து அங்கு சென்ற புதுவண்ணாரப்பேட்டை போலீசார்,சண்டையிட்ட மாணவிகளை எச்சரித்து அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக நடைபெற்ற விசாரணையில் கல்லூரி வளாகத்திற்குள் கழிவறை சென்ற இடத்தில் ஏற்பட்ட வாய்த்தகராறு முற்றி சாலையில் குடுமிப்பிடி சண்டையாக மாறியது தெரியவந்தது.
சண்டைக்கான காரணம்:மேலும் சண்டையிட்டதில் ஒரு தரப்பினர் புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும், மற்றொரு தரப்பினர் வெளியூரிலிருந்து வந்து படிப்பவர்கள் எனவும் தெரியவந்துள்ளது. வாய்த்தகராறு முற்றி சாலையில் குடுமிப்பிடி சண்டையானதா அல்லது சண்டையிட்ட மாணவிகளுக்கிடையே வேறு ஏதேனும் முன்விரோதம் உள்ளதா? என விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் சாலையில் குடுமிப்பிடி சண்டை போட்டது தொடர்பாக சண்டையிட்ட 10 மாணவிகளை கண்டறிந்து கல்லூரி நிர்வாகம் இடைநீக்கம் செய்துள்ளது.
நடு ரோட்டில் குடுமிபிடி சண்டை! - 10 மாணவிகள் சஸ்பெண்ட் இதையும் படிங்க:புஷ்பா ஸ்டைலில் கணவனின் கழுத்தை அறுத்த மனைவி- தெலுங்கனாவில் அதிர்ச்சி சம்பவம்