சென்னை: தலைநகரில் அரசின் வழிமுறைகளை பின்பற்றாத நிறுவனங்கள் கடைகள் மற்றும் தனி நபர்களிடம் இருந்து ஒரே நாளில் ஒரு லட்சத்து 54 ஆயிரத்து 700 ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.
கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக நாடே முடங்கிய நிலையில், மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு தொழில் வணிக நிறுவனங்கள் அலுவலகங்கள் மற்றும் அங்காடி இயக்க அனுமதி வழங்கியது.
மேலும் தளர்வுகளுடன் இயங்கும் தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள், வங்கிகள் மற்றும் வழிபாட்டு தலங்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை அரசு அறிவித்துள்ளது.
முகக்கவசம் அணிவது இரண்டு மீட்டர் இடைவெளி உடன் தகுந்த இடைவெளியை கடைப்பிடித்து கைகளை கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்வது போன்ற வழிமுறைகளை கட்டாயம் பின்பற்ற மாநகராட்சி சார்பில் பல்வேறு விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அரசு வழிமுறைகளை பின்பற்றாத நிறுவனங்கள் மற்றும் தனி நபர்களிடம் இருந்து இன்று (அக்.28) ஒரே நாளில் மட்டும் ஒரு லட்சத்து 54 ஆயிரத்து 200 ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.