தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

தொலைந்துபோன உறவுகளை வீடுகளில் கொண்டு சேர்க்கும் ’காவல் கரங்கள்’! - காவல் கரங்கள்

ஏதோ ஒரு காரணத்தினால் தங்கள் வீடுகளிலிருந்து வெளியேறி தொலைந்து போனவர்களைக் கண்டுபிடித்து, அவர்களுக்கு உதவிக்கரம் நீட்டி, மீண்டும் அவர்களின் வீடுகளுக்கு அவர்களைக் கொண்டு சேர்க்கும் சென்னை காவல் துறையின் ’காவல் கரங்கள் திட்டம்’ குறித்த செய்தித்தொகுப்பை இங்கு காணலாம்.

kaaval-karangal
kaaval-karangal

By

Published : Aug 12, 2021, 10:07 AM IST

சென்ற ஏப்ரல் மாதம் முதல் சென்னை காவல் துறையினரால் 'காவல் கரங்கள்' என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டம் மூலம், சென்னையில் ஆதரவில்லாமல் சுற்றித் திரியும் மன, உடல் நலம் பாதிக்கப்பட்டவர்கள் கண்டறியப்பட்டு, பாதுகாப்புடன் அவர்களின் உறவினர்களுடன் சேர்க்கப்படுகின்றனர்.

இந்தத் திட்டத்தில் தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள் ஆகியோரின் பங்களிப்பும் உள்ளது. அதுமட்டுமல்லாமல், மீட்கப்படுவோருக்கான மருத்துவ சிகிச்சை, தேவையான உதவிகள் வழங்கப்படுகின்றன.

600க்கும் மேற்பட்டோர் மீட்பு

அந்த வகையில் இதுவரை 614 பேர் மீட்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, சென்னையில் இதுவரை ஒடிசா, பிகார், உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த 127 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.

அவர்களை, சென்னை பெருநகரக் காவல் ஆணையர் சங்கர் ஜிவால், ஜூலை 25ஆம் தேதி சென்னை, எம்ஜிஆர் சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து வழியனுப்பி வைத்தார். அங்கிருந்து அவர்கள், ராஜஸ்தானில் உள்ள ’அப்னா கர்’ என்னும் தொண்டு நிறுவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அவரவர் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

அதே போல டெல்லி, ராஜஸ்தான் பகுதிகளில் மனநலம் பாதிக்கப்பட்டு சுற்றித் திரிந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த 11 பேரை அந்தந்த மாநில காவல்துறையின் உதவியுடன் மீட்டு, சென்னை காவல் துறையினர் அவர்களை வீடுகளுக்கு கொண்டு வந்து சேர்த்தனர்.

இந்நிலையில், இந்த ஒப்படைக்கும் நிகழ்வு, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நேற்று (ஆகஸ்ட்.11) நடந்தது.

மீட்கப்பட்டவர்கள் பேட்டிகள்

அதில், மகாராஷ்டிரா மாநிலம் புனேவில், 2017ஆம் காணாமல் போன, மரியா என்பவர் தனது நான்கு மகள்களுடன் வீடியோ அழைப்பில் கண்ணீர் மல்கப் பேசினார். நான்கு ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த அவர், தமிழில் பேசியதால் இங்கு அழைத்துவரப்பட்டுள்ளார். தொடர்ந்து அவர் மகாராஷ்டிராவைச் சேர்ந்தவர் என்பதால், ரயில் மூலம் அங்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் குடும்பத்துடன் வசித்துவந்த பி.காம் பட்டதாரியானசெல்வம் நாயுடு என்பவர்,2004ஆம் ஆண்டு சுனாமியில் தனது மனைவி, குழந்தைகளை இழந்தார். அதனால் விரக்தியில், ரயில் மூலம் மும்பை சென்று அங்கு ஆதரவின்றி நடைமேடையில் படுத்துறங்கி வாழ்ந்து வந்துள்ளார்.

அதன்பின் டெல்லி சென்று கரோனா தொற்று காலத்தில் உணவின்றி தவித்து வந்துள்ளார். அப்படி, 17 ஆண்டுகள் அனாதையாக சுற்றித்திரிந்த அவரை மீட்டு, சென்னை கொண்டுவந்து காப்பகத்தில் தங்க வைத்துள்ளனர்.

மதுரையைச் சேர்ந்த மகேஸ்வரி என்பவர் தனது கணவர் இரண்டாவது திருமணம் செய்துகொண்டதால், 13 ஆண்டுகளுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறினார். அவர் ராஜஸ்தானில் உள்ள காப்பகத்தில் இருப்பதை அறிந்த, சென்னை காவல் துறையினர் உடனே அங்கு சென்று மீட்டு தமிழ்நாடு கொண்டுவந்தனர். தற்போது அவர் மகன் அன்பரசன் என்பவரிடம் மகேஸ்வரி ஒப்படைக்கப்பட்டார்.

இது குறித்துப் பேசிய சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால், "காவல் கரங்கள் திட்டத்தின் மூலம் 596 பேர் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஆதரவற்றோர் காப்பங்களிலும், குடும்பம் உள்ளோர் வீடுகளிலும் சேர்க்கப்படுகின்றனர். தற்போது தமிழ்நாட்டைச் சேர்ந்த 11 பேர் வெளிமாநிலங்களிலிருந்து மீட்கப்பட்டு ஒப்படைக்கப்பட்டுள்ளனர்" என்றார்.

காவல் கரங்கள் உதவி மையம்

  • FaceBook: https://www.facebook.com/Kaval-Karangal-109411544771316
  • Twitter: https://Twitter.com/Kavalkarangal
  • WhatsApp : 94447-17100
  • Instagram: https://www.instagram.com
  • G-Mail:KavalKarangalchennai@gmail.com

காவல் கரங்கள் எவ்வாறு செயல்படுகிறது?

  • காவல் கட்டுப்பாட்டு அறையின்கீழ் செயல்படும் இந்தத் திட்டத்தில் ரோந்துப்பணியில் சுமார் 700 ரோந்து வாகனங்கள் செயல்படுகின்றன. அவற்றின் மூலம் சாலையோரங்களில் ஆதரவன்றி இருக்கும் நபர்கள் மீட்கப்படுவர்.
  • இதற்கு தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்களும் உதவி செய்கின்றன.
  • நாடு முழுவதும் உள்ள காப்பகங்களின் தொலைபேசி எண்கள், அக்காப்பகங்களில் உள்ள தமிழ் பேசும் நபர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு அதன் மூலம் மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
  • முதியோருக்கு உதவி மைய எண் 1253, பெண்கள் உதவி மைய எண் 1091, சிறுவர் உதவி மைய எண் 1098 ஆகியவை தனித்தனியாக பயன்படுத்தப்படுகின்றன.

இதையும் படிங்க:ஆதரவற்ற மக்களுக்காக தொடங்கப்பட்ட "காவல் கரங்கள்"

ABOUT THE AUTHOR

...view details