சென்னையில் ஆதரவற்ற நிலையில் சாலையோரம் வசிப்போர் மற்றும் முதியோர்களின் நலன் காக்கும் பொருட்டு சென்னை காவல்துறை சார்பில் "காவல் கரங்கள்" என்ற புதிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் இத்திட்டத்தினை சென்னை காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் தொடங்கி வைத்தார். மேலும், காவல் கரங்கள் பற்றிய குறும்படத்தினையும், கரோனாவும், காவல்துறையும் என்ற யூடியூப்(YouTube) குறும்படத்தினையும் காவல் ஆணையர் இந்நிகழ்ச்சியின் வாயிலாக வெளியிட்டார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது;
காவல் கட்டுப்பாட்டு அறையின் கீழ் செயல்படும் இந்த திட்டத்தில் ரோந்துப்பணியில் ஈடுபட்டு வரும் சுமார் 700 ரோந்து வாகனங்கள் செயல்படவுள்ளன. இந்த திட்டத்தின் வாயிலாக சாலையோரங்களில் ஆதரவன்றி இருக்கும் நபர்கள் மற்றும் முதியோர்களை மீட்டு அவர்களுக்கு மருத்துவ உதவிகள் அளித்து, உண்ண உணவும், இருப்பிடமும் இல்லாமல் இருப்பவர்களை காப்பகங்களில் சேர்க்க தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து காவல்துறை செயல்படவுள்ளது. இந்த திட்டத்தின் வாயிலாக அரசு தொண்டு நிறுவனங்கள், முதியோர், பெண்கள், சிறுவர்களுக்கான உதவும் காப்பகங்களின் உதவியைப் பெற தொலைபேசி எண்கள் அடங்கிய கையேடும் காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல் இந்த சேவையில் ஈடுபடவுள்ள 12 தன்னார்வ தொண்டர்களுக்கு சேவை பயன்பாட்டிற்காக 12 எலக்டிரானிக் டேப்லட்களை காவல் ஆணையர் இந்நிகழ்ச்சியின்போது வழங்கினார். இந்நிகழ்ச்சியில் பேசிய காவல் ஆணையர், சாலைகளில் உள்ள ஆதரவற்ற முதியோர், பெண்கள் மற்றும் சிறுவர்கள் குறித்து சென்னை பெருநகர காவலில் இயங்கி வரும் முதியோர் உதவி மைய எண் 1253, பெண்கள் உதவி மைய எண் 1091, சிறுவர் உதவி மைய எண் 1098 மற்றும் காவல் கட்டுப்பாட்டறை எண் 100 ஆகியவற்றில் வரும் தகவல்கள் காவல் உதவி மையம் மூலம் பெறப்பட்டு ரோந்து வாகனத்திற்கு தகவல் கொடுக்கப்படும்.