சென்னை: சா்வதேச அளவில் விமானப் போக்குவரத்து, விமான நிலையங்களின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுகளை லண்டனை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் சிரியம் (Cirium) என்ற நிறுவனம் ஆண்டுதோறும் ஆய்வுசெய்து வெளியிட்டு வருகிறது.
அந்நிறுவனம், 2021ஆம் ஆண்டில், விமான நிறுவனங்கள் மற்றும் விமான நிலையங்களின் செயல்பாடுகள், விமானங்கள் புறப்பாடு, வருகை பற்றி விரிவான ஆய்வை நடத்தியுள்ளது. அந்த ஆய்வறிக்கை தற்போது வெளியிட்டுள்ளது.
2021ஆம் ஆண்டில், பெரிய சர்வதேச விமான நிலையங்களிலிருந்து, குறித்த நேரத்தில் விமானங்கள் புறப்பட்டதில், சென்னை விமான நிலையம் 89.32 சதவீதத்துடன் எட்டாவது இடம் பிடித்துள்ளது.
மொத்தம் 49 ஆயிரத்து 923 விமானங்கள் சேவை வழங்கி உள்ளன. இதில், 70 வழித்தடங்களில், 81.90 சதவீதம் விமானங்கள் கண்காணிக்கப்பட்டுள்ளன. 28 கோடி இருக்கைகள் என்ற அடிப்படையில், பெரிய விமான நிலையங்களைக் கருத்தில் கொள்ளப்பட்டு கணக்கிடப்பட்டுள்ளது.