சென்னை:சென்னை பன்னாட்டு விமான நிலையத்திற்கு சார்ஜாவிலிருந்து நேற்று (டிசம்பர் 30) நள்ளிரவு விமானம் வந்தது. இந்த விமானத்தில் 128 பயணிகள் பயணித்தனர். விமானம் நடைமேடையில் நின்றதும் பயணிகள் நேரிடையாக குடியுரிமை பகுதிக்குச் செல்ல வேண்டும்.
விமானங்கள் திறந்தவெளி நடைமேடையில் நின்றதால் நிறுவன சொகுசுப் பேருந்துகளில் பயணிகள் அழைத்துவரப்பட்டனர். அப்போது 13 பேர் பயணம் செய்த பேருந்து பன்னாட்டு முனையத்திற்குச் செல்லாமல் உள்நாட்டு முனையத்திற்கு அழைத்துவரப்பட்டனர்.
உள்நாட்டு முனையத்திற்கு வந்த பயணிகள் குடியுரிமை பகுதி எங்கே என்று கேட்ட பின்னர்தான், அங்கிருந்த அலுவலர்களுக்குப் பன்னாட்டுப் பயணிகள் எனத் தெரியவந்தது. உடனடியாக பயணிகள் உள்நாட்டு முனையத்திலிருந்து பன்னாட்டு முனையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது பற்றி விமான நிலைய ஆணையம் உடனடியாக விசாரணை நடத்தி பேருந்து ஓட்டுநருக்கு விமான நிலையத்தில் வாகனங்கள் இயக்க வழங்கப்பட்ட உரிமத்தை ரத்துசெய்தனர். மேலும், விமான நிலைய வாகன ஓட்டுநர்களுக்கு உரிய பயிற்சி வழங்கப்படும் என அலுவலர்கள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: கோவை சூலூர் விமானப்படைத் தள தலைமை அலுவலர் மாற்றம்!