சென்னை: 'செங்கல்பட்டு மருத்துவக்கல்லூரியில் புகாரை மாற்றி மாற்றி கூறிய ஏஆர்எம்ஓ 2 பேரையும் பணியிட மாற்றம் செய்யக்கூறினேன். மேலும் தன் மீதே புகார் தெரிவித்த ஏஆர்எம்ஓ பணியில் இருந்து நீக்கப்பட வேண்டிய நபர். ஆனால், கருணை அடிப்படையில் பணி மாற்றம் செய்யப்பட்டுள்ளார்’ என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
மேலும் அவர் தமிழ்நாட்டில் கடந்த ஓராண்டில் மட்டும் 9.19 கோடி ரூபாய் மதிப்புள்ள 152.36 டன் குட்கா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது எனக் கூறினார். சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற போதை ஒழிப்பு தின உறுதி மொழியேற்பு நிகழ்ச்சியை சென்னை சைதாப்பேட்டை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் உள்ள மாணவிகள் எல்இடி திரையில் பார்த்தனர்.
இதனை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மாணவிகளுடன் இணைந்து பார்த்தார். பின்னர் மாணவிகளுடன் சேர்ந்து அமைச்சரும் உறுதிமாெழியை ஏற்றார். இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசுகையில், ‘போதைப்பொருட்கள் இல்லாத தமிழ்நாடு என்ற வகையில் வெற்றிகரமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. இதில் சுகாதாரத்துறை, காவல் துறை, பள்ளிக்கல்வி, உயர் கல்வித்துறை, சமூக நலத்துறை உள்ளிட்ட துறைகள் இணைந்து போதை தடுப்புப்பணியில் ஈடுபட்டுள்ளது.
இதில், 11ஆம் தேதியன்று ஆண்டுதோறும் போதை ஒழிப்பு தினம் அனுசரிக்க உறுதி மொழியேற்க முதலமைச்சர் திட்டம் அறிவித்துள்ளார். உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள், கல்லூரிகளில், அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களில் உள்ள 30 லட்சம் மாணவர்கள் பங்கேற்று உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். இது உலக சாதனைகளில் இடம் பெற்றுள்ளது. இதற்கான பதக்கம், சான்றிதழ்கள் முதலமைச்சரிடம் வழங்கப்பட்டுள்ளன.
9 கோடி மதிப்புள்ள குட்கா பறிமுதல்: தமிழ்நாட்டில் கடந்த 2013ஆம் ஆண்டு முதல் போதைப்பொருட்கள் தடை செய்யப்பட்டுள்ளது. இதில் கடந்த 2013ஆம் ஆண்டு முதல் ஜூன் வரையில் 39 கோடி மதிப்புள்ள 952 டன் குட்கா கடந்த 9ஆண்டுகளில் கைப்பற்றப்பட்டுள்ளது. இதில் 9.19 கோடி மதிப்புள்ள 152.36 டன் குட்கா கடந்த ஓராண்டில் மட்டும் கைப்பற்றப்பட்டுள்ளது. இதுவரை 6இல் ஒரு மடங்கு குட்கா கைப்பற்றப்பட்டுள்ளது.
இந்த பறிமுதல் செய்யப்பட்ட குற்றவியல் வழக்குகள் தொடர்பாக கடந்த 9ஆண்டுகளில் 686 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆனால், கடந்த ஓராண்டில் மட்டும் 104 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மொத்த தண்டனை பெற்றவர்களில், கடந்த 9ஆண்டுகளில் 119 பேரும், கடந்த ஓராண்டில் மட்டும் 29 பேரும் தண்டனைப்பெற்றுள்ளனர். கடந்த 9ஆண்டுகளில் ரூ. 21.91 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. ஆனால் கடந்த ஓராண்டில் ரூ.7.28 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
உரிமையியல் வழக்குகள் என கடந்த 9ஆண்டுகளில் 107 வழக்குகளும், ஓராண்டில் 11 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டு, 96 பேர் தண்டனை பெற்றுள்ளனர். இதில் கடந்த ஓராண்டில் மட்டும் 9 பேர் தண்டனைப் பெற்றுள்ளனர். 9 ஆண்டுகளில் 75 கடைகளுக்கும், கடந்த ஓராண்டில் 44 கடைகளுக்கும் சீல் வைக்கப்பட்டுள்ளது. அதிவேக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இளைஞர்களை மீட்கவும், தமிழ்நாட்டை உருவாக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதில் மிகப்பெரிய வெற்றி கிடைக்கும்.
'செங்கல்பட்டு மருத்துவர் பணிநீக்கம் செய்யப்பட வேண்டியவர்' - தன்மீது குற்றம்சாட்டியவர் பற்றி மனம் திறந்த அமைச்சர் செங்கல்பட்டு விவகாரம்: செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் உள்ள ஆர்எம்ஓ, ஏஆர்எம்ஓ ஆகியோர் இடையே பனிப்போர் கடந்த 2ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. மருத்துவம் படித்த மகத்தான மருத்துவப் பணியில் உள்ள மருத்துவர்கள் மாறி மாறி குறை கூறி, அரசிடம் புகார் அளிக்காமல், சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இது தனது கவனத்திற்கு வந்ததால் இருவரும் வேறு வேறு இடங்களுக்கு மாற்றம் செய்யப்பட்டனர். இதுகுறித்து விசாரிக்கக் குழு அமைக்கப்பட்டுள்ளது. விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டவரில் ஒரு நபர் தன் மீது குற்றம்சாட்டியுள்ளார். பணியில் இருந்து நீக்கப்பட வேண்டியவர் அந்த ஏஆர்எம்ஓ. ஆனால், கருணை அடிப்படையில் பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளார். போதைப் பழக்கத்தை ஒழித்தால் சமூக விரோதப்போக்கும் குறையும். புதிய புதிய போதைப்பொருட்களை அறிவியல் பூர்வமாக கண்டுபிடித்து வருகின்றனர்.
இதனை சுகாதாரத்துறை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கும். தடை செய்யப்பட்ட மருந்துகளை விற்பனை செய்வதை தடுக்க வேண்டும். அதனை உறுதி செய்ய வேண்டும் என உணவு பாதுகாப்புத்துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதே போல 5ஆண்டுகள் பணியில் உள்ள மருந்தாளுநர்கள், செவிலியர்களை விருப்ப பணியிட மாற்றம் செய்வது குறித்து பொது சுகாதாரத்துறை சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது’ எனத்தெரிவித்தார்.
இதையும் படிங்க:அமைச்சர் மா.சுப்ரமணியன் மீது அரசு மருத்துவர் புகார் அளிக்கும் பரபரப்பு வீடியோ...!