தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

அரிசி கொள்முதல் டெண்டர்! - மத்திய, புதுச்சேரி அரசுகள் பதிலளிக்க ஆணை! - அரிசி கொள்முதல்

சென்னை: புதுச்சேரியில் பொது வினியோகத் திட்டத்திற்காக, டெண்டர் மூலம் அரிசி கொள்முதல் செய்ய தடை விதிக்கக் கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி, மத்திய அரசுக்கும், புதுச்சேரி அரசுக்கும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

highcourt
highcourt

By

Published : Feb 6, 2021, 5:09 PM IST

புதுச்சேரியில் கூட்டுறவு சங்கங்களின் கீழ் இரு நவீன அரிசி ஆலைகள் இருந்த போதும், பொது வினியோகத் திட்டத்திற்காக டெண்டர் மூலம் அரிசி கொள்முதல் செய்யப்படுவதாகக் கூறி, காரைக்கால் விவசாயிகள் சங்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மனுவில், விவசாயிகளிடம் இருந்து நெல்லை கொள்முதல் செய்ய குறைந்தபட்ச ஆதரவு விலையை மத்திய அரசு நிர்ணயித்த போதும், பொது வினியோகத் திட்டத்திற்காக விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்யப்படுவதில்லை எனக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. நேரடி கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்யக் கோரி அதிகாரிகளுக்கு மனு அளித்தும், எந்த பதிலும் இல்லை எனவும் மனுவில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், உணவு மானியத்தை நேரடியாக பயனாளிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தும் திட்டம் அமல்படுத்தப்படுவதால் தான், விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்யப்படவில்லை என்பதால், பொது வினியோகத் திட்டத்திற்கான அரிசியை கொள்முதல் செய்ய டெண்டர் முறையை பின்பற்றவும், பயனாளிகள் வங்கிக் கணக்கில் உணவு மானியம் செலுத்தும் முறைக்கும் தடை விதிக்க வேண்டும் என மனுவில் கோரப்பட்டுள்ளது.

மேலும், விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்ய உத்தரவிட வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு, மனுவுக்கு ஐந்து வாரங்களில் பதிலளிக்க, மத்திய அரசுக்கும், புதுச்சேரி அரசுக்கும் உத்தரவிட்டுள்ளது.

இதையும் படிங்க: கிரண் பேடிக்கு எதிராக நடந்த போராட்டம்: முடித்து வைத்த முதலமைச்சர்!

ABOUT THE AUTHOR

...view details