சென்னை மாநகராட்சி வார்டு ஒதுக்கீடு தொடர்பாக 2019ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அறிவிப்பின்படி, ஆண்களை விட பெண்களுக்கு அதிக வார்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளதாகக் கூறி, சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஆர். பார்த்திபன் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
அவர் தனது மனுவில், சென்னை மாநகராட்சிக்கான மொத்தமுள்ள 200 வார்டுகளில் பட்டியலினத்தவர், பட்டியலினத்தைச் சேர்ந்த பெண்களுக்கு மொத்தமாக 32 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார்.
மீதமுள்ள 168 இடங்களில் 2016ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட தமிழ்நாடு நகராட்சி சட்டத்தின் அடிப்படையில் பெண்களுக்கு 50 விழுக்காடு இட ஒதுக்கீடாக 84 இடங்கள்தான் ஒதுக்கப்பட்டிருக்க வேண்டும் எனவும், ஆனால் பெண்களுக்கு 89 இடங்களும் ஆண்களுக்கு 79 இடங்களும் ஒதுக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், பெண்களுக்கு கூடுதலாக வார்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளது பாரபட்சமானது எனவும், இதைச் சரிசெய்யக் கோரி நவம்பர் 13ஆம் தேதி தமிழ்நாடு அரசுக்கும், மாநில தேர்தல் ஆணையருக்கும் மனு அளிக்கப்பட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் தனது மனுவில் தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கு பொறுப்புத் தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி, நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, சென்னை மாநகராட்சித் தரப்பில் முன்னிலையான வழக்கறிஞர், மாநகராட்சி வார்டுகளில் பெண்களுக்கு 50 விழுக்காட்டுக்கு குறையாமல் இட ஒதுக்கீடு வழங்கி 2019ஆம் ஆண்டு அறிவிப்பு வெளியிடப்பட்ட பின், மண்டல வாரியாக ஒதுக்கீடு வழங்கக் கூறி அறிவிப்பாணை வெளியிடப்பட்டதாகவும், ஒற்றைப்படைகளில் வார்டுகள் எண்ணிக்கை வரும்போது, கூடுதலாக வரும் ஒரு வார்டு பெண்களுக்கு ஒதுக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.
இதையடுத்து மாநகராட்சி சட்டத்தின் குறிப்பிட்ட சட்டத் திருத்தங்களை எதிர்த்து புதிய வழக்குத் தொடர்வதாகக் கூறி இந்த வழக்கைத் திரும்பப் பெற வழக்கறிஞர் பார்த்திபன் அனுமதி கோரினார். அதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், மனுவைத் திரும்பப் பெற அனுமதித்து வழக்கைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க:முன்னாள் சிறப்பு டிஜிபியின் கோரிக்கையை நிராகரித்த உச்ச நீதிமன்றம்