தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

கட்சிகளுக்கு நிரந்தர சின்னம் ஒதுக்குவதை எதிர்த்து வழக்கு! - தேர்தல் சின்னங்கள்

சென்னை: அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு நிரந்தர சின்னம் ஒதுக்க வகை செய்யும், தேர்தல் சின்னங்கள் ஒதுக்கீட்டு உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

symbols
symbols

By

Published : Dec 26, 2020, 5:10 PM IST

இது தொடர்பாக தமிழக முற்போக்கு மக்கள் கட்சியின் சட்டப்பிரிவு செயலாளர் பிரபாகரன் தாக்கல் செய்துள்ள மனுவில், ” நாடு சுதந்திரம் அடைந்த போது கல்வியறிவு பெற்றோர் எண்ணிக்கை 12% ஆக இருந்ததால், தேர்தல்களில் சின்னம் ஒதுக்கும் நடைமுறை அமல்படுத்தப்பட்டது. தற்போது 84% கல்வியறிவு பெற்றோர் உள்ள நிலையிலும், சின்னங்கள் ஒதுக்குவது தேவையற்றது.

பல நாடுகளில் தேர்தல்களின் போது வாக்குச் சீட்டுகளில் வேட்பாளர் மற்றும் கட்சியின் பெயர் மட்டுமே இடம் பெற்றுள்ளது. இந்தியாவில் சின்னங்கள் வழங்குவதற்கு எந்த நியாயமான காரணமும் இல்லை. தேர்தல் சின்னங்கள் ஒதுக்கீட்டு உத்தரவின் அடிப்படையில், தேர்தல் ஆணையம், அங்கீகரிக்கப்பட்ட மற்றும் பதிவு செய்யப்பட்ட கட்சிகளுக்கு நிரந்தர சின்னங்களை ஒதுக்குகிறது. ஆனால், தேர்தல் நடத்தை விதிகள், இதுபோல் நிரந்தர சின்னங்கள் ஒதுக்க வகை செய்யவில்லை.

மாறாக, சின்னங்கள் பட்டியலை வெளியிட்டு, அவற்றை ஒதுக்குவதற்கான விதிமுறைகளை வகுக்க அறிவுறுத்தியுள்ளது. இதனால் அங்கீகரிக்கப்பட்ட மற்றும் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு, நிரந்தர சின்னங்கள் ஒதுக்க வகை செய்யும் தேர்தல் சின்னங்கள் ஒதுக்கீட்டு உத்தரவை, அரசியல் சாசன விரோதம் என அறிவிக்க வேண்டும். வரும் சட்டப்பேரவை தேர்தலில் தங்கள் கட்சிக்கு பொது சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும்.

ஆளுங்கட்சி தங்கள் சின்னத்தை பிரபலப்படுத்த, அரசு பணத்தை செலவிடுவது என்பது ஊழல் நடவடிக்கைக்கே வழிவகுக்கும் ” என மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க:சட்ட விரோத கட்டடங்கள் மீது கடும் நடவடிக்கை! - சென்னை மாநகராட்சி உறுதி!

ABOUT THE AUTHOR

...view details