சென்னை:திருவொற்றியூர் காலடிபேட்டை பகுதியைச் சேர்ந்த ஜெயகுமார்(40), திருவொற்றியூர் எண்ணூர் விரைவு சாலையில் நடந்து சென்றபோது, அவருக்குப் பின்னால் மோட்டார் சைக்கிளில் சென்ற இருவர், அவர் அணிந்திருந்த 4 சவரன் சங்கிலியை பறித்துச் சென்றனர்.
இதுதொடர்பாக ஜெயகுமார் திருவொற்றியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். தனிப்படை அமைத்து சங்கிலி பறிப்பு கொள்ளையர்களை போலீசார் தேடி வந்தனர்.
பிடிபட்ட கொள்ளையர்கள்
இந்நிலையில் செயின் பறிப்பு கொள்ளையர்கள் செங்கல்பட்டு பகுதியில் பதுங்கி இருப்பதாக தனிப்படை காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்ற போலீசார் 4 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
பிடிபட்டவர்கள் புதுவண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்த சதீஷ்(21), பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்த ஜங்கிலி என்கிற ஆகாஷ்(20), செங்கல்பட்டு பகுதியை சேர்ந்த தினேஷ்குமார்(20), விக்கி என்கிற விக்னேஷ்(19) என தெரியவந்தது.
விசாரணையின் போது ஜெயக்குமாரின் நகையைப் பறித்தது சதீஷ், ஆகாஷ் என்பதும்,அவர்களுக்கு செங்கல்பட்டில் பதுங்க தினேஷ்குமாரும், விக்னேசும் அடைக்கலம் தந்ததும் தெரியவந்தது.