சென்னை: காவல் ஆணையர் அலுவலகம் அருகே ஷோப்னலோக் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இக்குடியிருப்பில் பெரும்பாலும் வடமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர்.
இங்கு வசித்து வரும் சசிகலா (65) என்பவர் நேற்று (ஜனவரி 5) பழங்கள் வாங்க செல்லும் வழியில், அடையாளம் தெரியாத நபர்கள், தாங்கள் சாமியார்கள் என்றும் குஜராத்திலிருந்து வந்திருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
மேலும், அருகே இருக்கும் ஜெயின் கோயிலில் பூஜைகள் செய்ய வேண்டும் எனவும் கூறியுள்ளனர். அவர்கள் சாமியார்கள் என சசிகலா நம்பியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, குடும்ப கஷ்டங்கள் விலக வேண்டுமானால், சசிகலா அணிந்திருக்கும் நகைகளை பணப்பையில் போட்டு கொடுக்க வேண்டும் என்று கூறிய அவர்கள், பின்னர் கையில் ஒரு பொருளை கொடுத்து அதை அருகில் இருக்கும் குப்பைத் தொட்டியில் வீசி விட்டு வந்தால் குடும்ப கஷ்டங்கள் விலகும் என்றும் தெரிவித்துள்ளனர்.
அவர்கள் கூறியதை நம்பி, குப்பைத் தொட்டியில் நகைகளை வீசி விட்டு வந்து பார்த்த போது, அவர்கள் 10 சவரன் நகைகளோடு இடத்தை காலி செய்திருந்தது தெரியவந்தது. தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த சசிகலா, வேப்பேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன் அடிப்படையில் வேப்பேரி காவல் துறையினர் அப்பகுதியின் சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்த போது, சசிகலாவை ஏமாற்றியவர்கள் வடநாட்டை சேர்ந்தவர்கள் என தெரியவந்தது. இதனையடுத்து, வடநாட்டு போலி சாமியார் கும்பலை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க:திருவான்மியூர் ரயில் நிலையத்தில் கொள்ளை: சிசிடிவி காட்சிகள் வெளியானது