சென்னை: நான் முதல்வன் திட்டத்தின் மண்டல மாநாட்டை சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, தொழிலாளர் நலன்மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை துறை அமைச்சர் கணேசன் துவக்கி வைத்தனர். இதில் பேசிய அமைச்சர் பொன்முடி பொறியியல் படிப்புடன் கூடுதல் படிப்புகளை கற்பித்து சான்றிதழ்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களைச் சேர்ந்த 68 பொறியியல் கல்லூரி முதல்வர்கள், பேராசிரியர்கள் கலந்துக் கொண்டனர். இதில் நான் முதல்வன் திட்டம் என்றால் என்ன? திட்டத்தை எவ்வாறு நடைமுறைப்படுத்த வேண்டும்? மாணவர்கள், பேராசிரியர்களுக்கு வழங்கப்பட வேண்டிய பயிற்சிகள் குறித்து கல்லூரி முதல்வர்களுக்கு அதிகாரிகள் விளக்கினர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சரின் தனிச் செயலாளர் உதயச்சந்திரன்,
“உயர்கல்வி நிறுவனங்களில் இருந்து வெளியேறும் மாணவர்கள் தனித்திறன்களுடன் வெளியேற வேண்டும் . படிப்பைத் தாண்டி, ஏதேனும் ஒரு தனித்திறனை மாணவர்கள் பெற்றிருக்க வேண்டியது அவசியம் .மாணவர்களின் தனித்திறன்களை மேம்படுத்தும் வகையில் அவர்களுக்கு பயிற்சி வழங்கி Industry 4.0-க்கு ஏற்ற வகையில் அவர்களை தயார் படுத்த வேண்டும்.
வேலைவாய்புக்கேற்ற வகையில் பாடத்திட்டம் மாற்றி வடிவமைக்கப்பட்டுள்ளது. புதிய பாடத்திட்டத்துக்கேற்ப மாணவர்களை தயார்படுத்த வேண்டும் . மாணவர்களுக்கு பாடத்திட்டம் சார்ந்த மதிப்பெண்கள் மட்டுமல்லாது, கூடுதலாக திறன் மேம்பாட்டு பயிற்சியை முடித்திருப்பதற்கான சான்றிதழ்களுடன் வெளியேற வேண்டும். படிப்பை முடித்து விட்டு வேலைக்காக முயலும் மாணவர்களின் சுயவிபரம் பற்றி பேச வேண்டும்” என தெரிவித்துள்ளார்.