தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

தபால் துறை தேர்வுகளில் மீண்டும் இந்தி திணிப்பு - கே.எஸ். அழகிரி - centre govt

சென்னை: தபால் துறை தேர்வுகள் மூலம் மீண்டும் இந்தி மொழியை மத்திய அரசு திணிக்கிறது என்று தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.

கே.எஸ்.அழகிரி

By

Published : Jul 13, 2019, 10:53 PM IST

இது தொடர்பாக கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில், "தபால் துறை தேர்வுகளில் இனி இந்தி, ஆங்கிலத்தில் மட்டுமே வினாத்தாள் வழங்கப்படும் என அனைத்து மாநிலங்களிலும் உள்ள தலைமை அஞ்சலகங்களுக்கு மத்திய அரசு சுற்றறிக்கை அனுப்பியிருக்கிறது.

தபால் துறைகளில் உள்ள பல்வேறு பதவிகளுக்கான தேர்வு நாடு முழுவதும் ஒரே நேரத்தில் நடத்தப்பட்டு, பணியிடங்களுக்கான ஆட்களை தேர்வு செய்வது வழக்கம். இந்த தேர்வுகளுக்கான வினாத்தாள்களில் அந்தந்த மாநில மொழிகள், இந்தி, ஆங்கிலம் என மூன்று மொழிகளில் கேள்விகள் இடம் பெறும்.

இந்நிலையில் கடந்த 2015ஆம் ஆண்டு தபால் துறைகளுக்கான தேர்வு தமிழ்நாட்டில் நடந்தது. இத்தேர்வில் ஹரியானா, பீகார் உள்ளிட்ட வடமாநில மாணவர்கள் தமிழ்த் தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்றனர். இதுகுறித்து மத்திய புலனாய்வுத் துறை விசாரணை நடத்தி வருகிறது. இதைத் தொடர்ந்து தேர்வுகள் நடத்தப்படுவது நிறுத்தப்பட்டது.

இந்நிலையில் கிராமிய அஞ்சல் பணியிடங்களுக்கான அறிவிப்பை தபால் துறை வெளியிட்டது. தற்போது, மத்திய அரசு ஏற்கனவே அமலில் உள்ள தேர்வு நடைமுறையில் மாற்றம் செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, அஞ்சல் துறையில் ஜூலை 14ஆம் தேதி 10,000 பணிகளுக்கான எழுத்து தேர்வு இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் மட்டுமே நடத்தப்படும் என்று ஜூலை 11ஆம் தேதி அறிவிப்பு வெளியானது.

இது இந்தி பேசாத மாநில மக்கள் மீது தொடுக்கப்பட்ட தாக்குதலாகும். இதன்மூலம் மாநில மொழிகள் புறக்கணிக்கப்பட்டு, ஆட்சி மொழிகள் சட்டத் திருத்தத்திற்கு விரோதமானதாகும். இதை உடனடியாக மத்திய பாஜக அரசு கைவிட வேண்டும்.

தமிழ்நாட்டு மக்கள் மீது இந்தி மொழியை திணிக்கிற உரிமை மத்திய அரசுக்கு இல்லை. இதை மீறி திணிக்க முயன்றால் கடும் விளைவுகளை நரேந்திர மோடி அரசு சந்திக்க வேண்டிவரும். எனவே, ஏற்கனவே நடைமுறையில் இருந்தபடி மாநில மொழிகளான தமிழ், ஆங்கிலம், மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் அஞ்சல்துறை கேள்வித்தாள்கள் வழங்கப்பட வேண்டும்' என கூறப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details