வங்கக் கடலின் தெற்குப் பகுதியில் உருவாகி, நவம்பர் 25ஆம் தேதி வீசிய நிவர் புயலால் தமிழ்நாட்டின் கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், செங்கல்பட்டு, சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பலத்த மழை பெய்தது. அத்துடன், வீசிய சூறைக்காற்றால் ஏராளமான வேளாண் நிலம் பாதிப்புக்குள்ளாகின.
அறுவடைக்கு ஆயத்தமாக இருந்த நெற்பயிர்கள் புயல், மழையில் முற்றாக அழிந்தன. புயல் பாதிப்புக்கு உள்ளான மாவட்டங்களில் மின்கம்பங்கள் சாய்ந்து, மின்சாரம் தடைப்பட்டது. நூற்றுக்கணக்கான குடிசைகள் பாதிக்கப்பட்டிருக்கின்றன. கடலோரப் பகுதிகளில் மீனவர்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்குத் தமிழ்நாடு அரசு சார்பில் தலா 10 லட்ச ரூபாயும், பயிர்ச்சேதங்கள், கால்நடைகள் உயிரிழந்தது குறித்து மதிப்பீடு செய்து நிவாரண உதவி வழங்கப்படும் எனத் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
இதனிடையே, நேற்று (நவ. 27) நிவர் புயல் பாதிப்புகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி, முதலமைச்சரிடம் தொலைபேசி வாயிலாக கேட்டறிந்தார். அப்போது, நிவர் புயல் பாதிப்புகள் குறித்து ஆய்வுசெய்ய மத்தியக் குழு அனுப்பிவைக்கப்படும் என்றும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்குப் பிரதமரின் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து இரண்டு லட்ச ரூபாய் வழங்கப்படும் என்றும் தெரிவித்ததாக கூறப்படுகிறது.