மத்திய அரசின் பொருளாதார மற்றும் தொழிலாளர் விரோதக் கொள்கைகளை எதிர்த்து ஜனவரி 8ஆம் தேதி நாடு முழுவதும் அனைத்துத்துறை தொழிலாளர்கள் சங்கத்தினர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர். இப்போராட்டத்தில் பங்கேற்பது தொடர்பாக சென்னை நுங்கம்பாக்கத்தில் மத்திய அரசு ஊழியர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தின் முடிவில் மத்திய அரசைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
அதைத்தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அரசு ஊழியர்கள் மகா சம்மேளன பொதுச்செயலாளர் துரைபாண்டியன், 'மத்திய அரசின் பொருளாதார மற்றும் தொழிலாளர் விரோதக் கொள்கைகளை கண்டித்து நாடு முழுவதும் தொழிலாளர்கள் நடத்தும் வேலை நிறுத்தத்தில் மத்திய அரசு ஊழியர்களும் பங்குபெறுகிறோம். புதிய ஓய்வூதியத் திட்டத்தை திரும்பப் பெறுதல், 56J விதியின்படி ஊழியர்களை கட்டாய ஓய்வில் அனுப்பக் கூடாது, ஒப்பந்த அடிப்படையில் வெளியாட்களை உயர் பதவிகளில் அமர்த்துவதற்கு எதிர்ப்பு உள்ளிட்டக் கோரிக்கைகளை வலியுறுத்தி இவ்வேலைநிறுத்தம் நடக்க இருக்கிறது.