நாடு முழுவதும் கடந்த 22ஆம் தேதி பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பிற்கு எதிராக 13 மாநிலங்களில் தேசிய புலனாய்வுத் துறையினர் அதிரடியாக சோதனை நடத்தினர். இந்த சோதனையின் முடிவில் 45 பேர் கைது செய்யப்பட்டனர். தமிழ்நாட்டிலிருந்து பாப்புலர் ஃப்ரெண்ட் அமைப்பைச் சேர்ந்த 11 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதன் தொடர்ச்சியாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உளவுத்துறை அதிகாரியுடன் ஆலோசனை மேற்கொண்டார். அதன் அடிப்படையில் இன்று (செப்.28) காலை பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா உட்பட ஐந்து அமைப்புகளை, ஐந்து ஆண்டுகளுக்கு தடை செய்து மத்திய அரசு உத்தரவிட்டது.
சென்னையில் உள்ள பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் தலைமை அலுவலகத்தில் காவல் துறையினர் குவிக்கப்பட்டனர். அந்த அலுவலகத்திற்கு முன்பாக இரும்பு தடுப்புகள் போடப்பட்டு அந்த அலுவலகம் சார்ந்த அனைவருக்கும் அனுமதி மறுக்கப்பட்டது.
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு தடை செய்யப்பட்டதை ஒட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையில் நான்காயிரம் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகச் சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்தார்.
மேலும் நகர் முழுவதும் காவல் துறையினர் உஷார் நிலையில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் மாநில தலைவர் அன்சாரி பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா பெயரில் செயல்பட்டு வந்த அனைத்து செயல்பாடுகளும் நிறுத்தப்படுவதாக அறிக்கை வெளியிட்டார்.
பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்கு தடை பின்னர் சட்ட விரோதமாக ஜனநாயக விரோதமாக செய்யப்பட்டுள்ள தடையை நீதிமன்றத்தில் சட்டரீதியாக எதிர்கொள்வோம் எனவும் தெரிவித்திருந்தார். தடை செய்யப்பட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் அமைப்பிற்கு ஆதரவாக யாரும் பேசினாலும் பிரச்சாரம் செய்தாலும் கருத்துக்கள் தெரிவித்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வந்து காவல் துறையினர் எச்சரித்துள்ளனர்.
இதையும் படிங்க:‘அமைச்சர் அன்பில் மகேஷுக்கு டெங்கு காய்ச்சல் இல்லை’ - மா.சுப்ரமணியன்