சென்னை: மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்திவரும் நிலையில் அகில இந்திய விவசாய சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் பெ. சண்முகம் யூ-டியூப் சமூக வலைதளத்தில் பதிவேற்றியுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது:-
எலும்பை குத்தி கிழிக்கும் கடும் குளிரையும் பொருட்படுத்தாது குழந்தைகள் முதல் 95 வயது முதியவர்கள் வரை டெல்லியில் போராடிவருகின்றனர்.
இப்படி ஒரு போராட்டத்தை நாடு கடந்த காலங்களில் சந்தித்து இருக்காது. தற்போது புதிய சகாப்தத்தை விவசாயிகள் ஏற்படுத்திவருகின்றனர். இந்தப் போராட்டத்தின் வீழ்ச்சி நாடு முழுக்க உள்ள போராட்டக்காரர்களுக்கு உத்வேகம் அளிக்கும்படி உள்ளது. உத்தரப் பிரதேசம், பஞ்சாப், ராஜஸ்தான், உத்தரகாண்ட் உள்ளிட்ட மாநில விவசாயிகள் டெல்லிக்கு சென்று போராடினால் போதுமானது என்பதால் தமிழ்நாடு மாநில விவசாயிகள் டெல்லிக்கு செல்லவில்லை.
மாநிலத்தில் நாங்கள் போராட்டம் நடத்திவருகிறோம். டெல்லி போராட்டத்தை தடுக்க அரசாங்கம் அத்தனை அடுக்குமுறையையும் பயன்படுத்தியது. இந்த அடக்கு முறைகளை, தடுப்புகளை அடித்து உடைத்து விவசாயிகள் டெல்லி நோக்கி முன்னேறியுள்ளனர். கடந்த காலங்களில் விவசாயிகள் தற்கொலை செய்து மாண்டுள்ளனர்.
ஆனால் தற்போது விவசாயிகள் தங்களின் கோரிக்கை நிறைவேறும்வரை வீடு திரும்ப மாட்டார்கள், போராடி வெல்வோம் அல்லது போராடி மாள்வோம்.
இந்த விவகாரத்தில் மத்திய அரசு பெருநிறுவனங்களுக்கு ஆதரவாக பேச்சுவார்த்தை என்ற பெயரில் கபட நாடகம் ஆடுகிறது. விவசாயிகளின் கோரிக்கைகள் முற்றிலும் நியாயமானது. தெளிவானதும் கூட.
ஆனால் மத்திய பாஜக அரசு விவசாயிகள் மீது அவதூறு பழிகளை கூறிவருகிறது. பாஜகவுக்கு எனது கடும் கண்டனங்கள். ஆட்சியாளர்கள் போராட்டத்துக்கு எங்கிருந்து பணம் வருகிறது என்று போராட்டத்தை என்ற கேள்வியின் மூலம் திசை திரும்புகின்றனர்.