சென்னை:சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீட்டு வரைவு அறிக்கை கடந்தாண்டு மார்ச் மாதம் 23ஆம் தேதி ஒன்றிய அரசு வெளியிட்டது. ஏப்ரல் மாதம் ஆங்கிலம், இந்தி மொழிகளில் வரைவு அறிக்கை அரசிதழில் வெளியிடப்பட்டது. அது தொடர்பான கருத்துகள், ஆட்சேபனையை தெரிவிக்க அவகாசம் வழங்கப்பட்டது.
பிராந்திய மொழிகளில் அதன் மொழிப்பெயர்ப்பை வெளியிடாமல், வரைவு குறித்த கருத்துக்கள், ஆட்சேபனைகளை தெரிவிக்க கோருவது ஏற்புடையதல்ல என்பதால் வரைவு அறிக்கை மீதான நடவடிக்கைகளுக்குத் தடை விதிக்க வேண்டும் எனவும் அனைத்து மாநில மொழிகளிலும் வரைவு அறிக்கையை வெளியிட உத்தரவிட வேண்டும் என மீனவ தந்தை கே.ஆர். செல்வராஜ் குமார், மீனவர் நல சங்கத்தின் தலைவர் தியாகராஜன் ஆகியோர் வழக்குத் தொடர்ந்தனர்.
60 நாள்கள் அவகாசம்
அதேபோல வரைவு அறிக்கை பிரிவுகளை ஆழமாக ஆய்வு செய்ய வேண்டியுள்ளதாகவும், அதை தமிழில் வெளியிட்டால்தான் தமிழ்நாட்டு மக்களால் ஆட்சேபங்களைத் தெரிவிக்க முடியும் என்பதால் தமிழில் வெளியிட வேண்டும் எனவும், அதன் மீது கருத்துக்களை தெரிவிக்க 60 நாள்கள் அவகாசம் வழங்க ஒன்றிய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என பூவிலகின் நண்பர்கள் அமைப்பின் சார்பில் சுந்தரராஜன் வழக்குத் தொடர்ந்தார்.