தமிழக சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு காவல்துறையினர், பலகோடி மதிப்பிலான திருட்டு மற்றும் கடத்தி பதுக்கப்பட்ட சிலைகளை தொடர்ந்து மீட்டு வருகின்றனர். அவ்வாறு மீட்கப்படும் சிலைகளின் தொன்மை குறித்து ஆய்வு செய்து, அவை எந்த காலகட்டத்தை சேர்ந்தவை எனக் கண்டறிந்து தொல்லியல் துறையினர் சான்றளிக்க வேண்டும். அதனடிப்படையில் தான் வழக்கில் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
அதன்படி, அண்மையில் மீட்கப்பட்ட 22 கடத்தல் கற்சிலைகள், சென்னை கிண்டியில் உள்ள சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளன. இந்த சிலைகளின் தொன்மை குறித்து ஆய்வு செய்வதற்காக மத்திய தொல்லியல் துறை ஆய்வுக் குழுவினர் இன்று அங்கு சென்றனர். மத்திய தொல்லியல் துறையின் தென்மண்டல இயக்குநர் மகேஸ்வரி, முன்னாள் இயக்குநர் தயாளன், தஞ்சை தமிழ் பல்கலைக்கழக சிற்பக்கலைத்துறை பேராசிரியை சீலா உள்ளிட்ட அதிகாரிகள் சிலைகளை ஆய்வு செய்தனர்.