மாதவரம் காவல் நிலையத்தில் பணியாற்றி வருபவர் உதவி ஆய்வாளர் ஆண்டிலின் ரமேஷ். நேற்று காலை பணி முடித்துவிட்டு அவர் வீட்டிற்கு செல்லும் வழியில், மாதவரம் ரவுண்டானா பகுதியில் இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேர், ஒருவரின் செல்ஃபோனை பறித்துக் கொண்டு தப்புவதை பார்த்துள்ளார். இதையடுத்து உடனடியாக அவர்களை தனது இருசக்கர வாகனத்தில் துரத்திச் சென்ற ஆண்டிலின், மாத்தூர் அருகே அவர்களை மடக்கிப் பிடிக்க முயற்சித்தார்.
அப்போது பைக்கின் பின்புறம் உட்கார்ந்திருந்த நபர் துரத்துவதை பார்த்து தப்பி ஓடிவிட்டார். ஆனால், இன்னொருவர் இருசக்கர வாகனத்தை வேகமாக ஓட்டி தப்பிக்க முயன்றபோது, அவரை சிறிது தூரம் ஓடியே துரத்தி உதவி ஆய்வாளர் ஆண்டிலின் ரமேஷ் மடக்கிப் பிடித்தார். சினிமாவில் வருவது போன்ற இக்காட்சிகள் அனைத்தும், அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது. பின்னர் இவை சமூக வலைதளங்களிலும் பரவி வைரலானது.