சென்னை: CBSE First term exams cheating issue: சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு முதல் பொதுகாலத்தேர்வு நவம்பர் 30ஆம் தேதி முதலும், 12ஆம் வகுப்பு முதல் பொது காலத்தேர்வு டிசம்பர் 1ஆம் தேதி முதலும் தொடங்கி நடைபெற்றது.
கரோனா சூழலை கருத்தில் கொண்டு முதல் முறையாக பொதுத்தேர்வை இரண்டு பிரிவுகளாக நடத்தி வருகிறது, சிபிஎஸ்இ.
முதல் காலத்தேர்வு நவம்பர் - டிசம்பரிலும், இரண்டாம் காலத்தேர்வு மார்ச் - ஏப்ரலிலும் நடத்தத் திட்டமிட்டுள்ளது. முதல் பருவத்தேர்வில் கொள்குறி வகை முறையை, முதல் முறையாக சிபிஎஸ்இ அறிமுகப்படுத்தியுள்ளது.
சிபிஎஸ்இ பள்ளிகள் மேலாண்மைக் கூட்டமைப்பின் செயலாளர் அசோக் பேட்டி இது குறித்து சிபிஎஸ்இ பள்ளிகள் மேலாண்மைக் கூட்டமைப்பின் செயலாளர் அசோக் சங்கர் ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு அனுப்பி உள்ள கடிதத்தில், 'சிபிஎஸ்இ 10 மற்றும் 12ஆம் வகுப்பு முதல் பொது பருவத் தேர்வில் பல்வேறு முறைகேடுகள், அகில இந்திய அளவில் நடைபெற்றுள்ளதால் அதை ரத்து செய்ய வேண்டும்.
தற்போது நடைபெற்று நிறைவு பெற்றுள்ள சிபிஎஸ்இ முதல் பருவத்தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளது' எனவும் சிபிஎஸ்இ பள்ளிகள் மேலாண்மைக் கூட்டமைப்பு குற்றம்சாட்டியுள்ளது.
இணையதளம் மூலம் வினாத்தாள் விநியோகம்
முதல் பருவ பொதுத்தேர்வில், தேர்வு மையங்களாக செயல்படும் சிபிஎஸ்இ பள்ளிகளில், மாணவர்களுக்கு தேர்வுக்கு முன்னரே வாட்ஸ்அப், இணையதளம், மின்னஞ்சல் வாயிலாக வினாத்தாள் விநியோகிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
கொள்குறி வகை வினாத்தாளில் விடைகள் தெரியாவிட்டால், ஏதேனும் ஒரு காலிக்கட்டத்தில் தற்காலிகமாக அடையாளப்படுத்துமாறும், தேர்வுக்குப் பிந்தைய மதிப்பீட்டின்போது மாணவர்களின் கொள்குறி வினாத்தாளில் ஆசிரியர்களே விடைகளை நிரப்பியதாகவும் புகார் எழுந்துள்ளன.
பல்வேறு பள்ளிகள் தேர்வு மையங்களாக செயல்படும் போது, அந்த பள்ளிகளைச் சேர்ந்த ஆசிரியர்களே பெரும்பாலும் தேர்வறை கண்காணிப்பாளர்களாக இருந்துள்ளனர். இதன் மூலம் அந்தந்த பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் அதிக மதிப்பெண் பெறும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
முதல் பருவ பொதுத்தேர்வு மதிப்பெண், இரண்டாம் பருவ பொதுத்தேர்வு மதிப்பெண் என்று இரண்டையும் சேர்த்து கணக்கிடப்பட்டே மாணவர்களுக்கு இறுதி மதிப்பெண்கள் வழங்கப்படும் என்பதால், உயர் கல்வி சேர்க்கையின்போது முறைகேடாக அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களால், நன்கு படித்து நல்ல மதிப்பெண் பெற்ற பிற மாணவர்கள் பாதிக்கப்படுவர்.
எனவே, சிபிஎஸ்இ முதல் பருவ பொதுத்தேர்வை ரத்துசெய்து மதிப்பெண் வழங்குதலை நிறுத்தி வைக்குமாறும், முதல் பருவத்தேர்வில் பெற்ற மதிப்பெண்களில் 10 விழுக்காடு மதிப்பெண் வெயிட்டேஜ் முறையில் வழங்க வேண்டும் எனவும் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு அனுப்பிய புகார் கடிதத்தில் வலியுறுத்தி உள்ளனர்.
இதையும் படிங்க:Hockey National Junior Championship: காலிறுதியில் வெளியேறியது தமிழ்நாடு!