மத்திய இடைநிலைக் கல்வி வாரிய பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கான பொதுத்தேர்வு, 12ஆம் வகுப்பிற்கு பிப்ரவரி 15 முதல் மார்ச் 30 ஆம் தேதி வரையிலும், 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்ரவரி 15 முதல் மார்ச் 20ஆம் தேதி வரையிலும் நடைபெறுகிறது. இந்நிலையில்,
மத்திய இடைநிலைக் கல்வி வாரியத் தலைவர் அனிதா கார்வால், மாணவர்களுக்கு அறிவுரைக் கடிதம் எழுதியுள்ளார். அதில்,
- தேர்வு தொடங்குவதற்கு முதல் நாள் மாணவர்கள் தேர்வு எழுதும் மையத்தினை அறிந்து கொள்ள வேண்டும்.
- மாணவர்கள் பள்ளிச் சீருடை மற்றும் அடையாள அட்டையுடன் மட்டுமே தேர்வுக் கூடத்திற்குச் செல்ல வேண்டும்.
- மாணவர்கள் தேர்வு மையங்களுக்கு காலை 9.45 மணி அல்லது கட்டாயம் 10 மணிக்கு முன்னர் செல்ல வேண்டும். 10 மணிக்கு மேல் தேர்வு மையத்திற்குள் மாணவர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள்.
- மாணவர்கள் எடுத்துச் செல்லும் பேனா, பென்சில், பள்ளி அடையாள அட்டை உள்ளிட்ட பொருட்கள் வெளிப்படையாகத் தெரியும் வகையில் இருக்க வேண்டும்.
- தேர்வு மையங்களுக்குள் செல்போன், பணப்பை உள்ளிட்டப் பொருட்களை கண்டிப்பாக எடுத்துச் செல்லக்கூடாது.
- தேர்வு மையங்களில் உள்ள கண்காணிப்பாளர்கள் கூறும் வழிமுறைகளை பின்பற்றி, விடைத்தாள் புத்தகத்தில் பதிவு எண்ணை எழுத வேண்டும்.
- தேர்வின்போது முறைகேடான செயல்களில் ஈடுபடக்கூடாது.
- தேர்வு மையத்தில் ஒழுக்கத்தினை கடைப்பிடிப்பதன் அவசியத்தை மாணவர்களுக்கு பெற்றோர் உணர்த்த வேண்டும்.
- தேர்வு நாட்களில் மாணவர்கள் சத்தான உணவு உட்கொள்வதையும், போதுமான ஓய்வு எடுப்பதையும் பெற்றோர் பார்த்துக் கொள்ள வேண்டும்.