சென்னை:திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த கல்யாண குமார் என்பவர் கன்ஸ்ட்ரக்ஷன் தொழில் செய்து வந்தார். கடந்த 2019ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தொழிலை பெருக்குவதற்காக கல்யாணகுமார் கடனுக்காக முயன்ற போது, அலோ ஸ்ரீவாத்சவ் என்பவர் டெல்லி பிரதமர் அலுவலகத்தில் சட்ட செயலாளராக பணியாற்றி வருவதாக கூறி செல்போனில் தொடர்பு கொண்டுள்ளார்.
பின்னர் பிரதமர் நிதியில் இருந்து எவ்வளவு தொகை வேண்டுமானாலும் கடனாக தருவதாக கூறி நம்ப வைத்து உள்ளார். ஆனால், அதற்கு 20 லட்சம் ரூபாய் முன்பணமாக தர வேண்டும் என்று அந்த நபர் கூறியதை நம்பி கல்யாண குமார் மும்பையில் வைத்து 20 லட்ச ரூபாயை கொடுத்துள்ளார்.
பல மாதங்களாகியும் கடன் தொகை கிடைத்ததால் மோசடி செய்யப்பட்டதை உணர்ந்த கல்யாண குமார் திருவள்ளூர் மாவட்ட குற்றப்பிரிவில் கடந்த 2019ஆம் ஆண்டே புகார் அளித்தார்.
புகாரின் பேரில் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் மோசடி மன்னனான சுகேஷ் சந்திரசேகர் டிஜிட்டல் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி ஆள்மாறாட்டம் செய்து பண மோசடியில் ஈடுபட்டது காவல்துறையினர் விசாரணையில் தெரிய வந்தது.
குறிப்பாக பரோலில் வெளிவந்த சுகேஷ் சந்திரசேகர் பல அரசு உயரதிகாரிகளின் பெயர்களை பயன்படுத்தி லஞ்சம் கேட்டு மிரட்டி வந்தது தெரியவந்தது. மோசடி செய்து சம்பாதித்த பணத்தில் வழக்கறிஞர் உட்பட சட்ட பிரச்சனைகளை கையாள சுகேஷ் சந்திரசேகர் அவரது நண்பரான டெல்லியை சேர்ந்த சஞ்சய் ஜெயின் என்பவருக்கு பணம் கொடுத்தது வந்துள்ளார்.
இந்நிலையில் அதே ஆண்டு 2019ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் திருப்பதி வரதையாபாளையத்தில் பிரபல நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி பல முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.
அப்போது சோதனைக்குள்ளான அந்த நிறுவன உரிமையாளரை தொடர்பு கொண்டு சுகேஷ் சந்திரசேகர், பிரதமர் அலுவலக சட்ட செயலாளர் பேசுவதாக கூறி ஆள்மாறாட்டம் செய்து 7.5 கோடி ரூபாய் பறித்ததும் காவல்துறையினர் விசாரணையில் தெரியவந்தது.