தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட குரூப் 4 தேர்வில் நடந்த முறைகேடு தொடர்பான விசாரணையை மாநிலக் குற்றப்புலனாய்வு காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். இம்முறைகேடு தொடர்பாக இதுவரை 17 பேர் கைது செய்யப்பட்டும், ஒரு சிலர் தேடப்பட்டும் வருகின்றனர். இந்நிலையில், 2017 ஆம் ஆண்டு நடந்த குரூப் 2A தேர்விலும் முறைகேடு நடந்திருப்பதாகவும், 42 பேர் முறைகேடு செய்து தேர்ச்சி பெற்றதாகவும் தேர்வாணையம் தரப்பில் சி.பி.சி.ஐ.டியிடம் புகார் அளிக்கப்பட்டது.
இதனை தனி வழக்காகப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கிய சி.பி.சி.ஐ.டி காவல்துறையினர், முறைகேடு செய்து தேர்ச்சி பெற்ற 42 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் இதுவரை 5 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். முக்கிய குற்றவாளிகளான ஜெயக்குமார், காவலர் சித்தாண்டி உள்ளிட்டோர் தலைமறைவாக உள்ள நிலையில், அவர்களைத் தேடும் பணியை சி.பி.சி.ஐ.டி தனிப்படை தீவிரப்படுத்தியுள்ளது.