சென்னை: தமிழ்நாட்டில் 2020ஆம் ஆண்டு பாதுகாக்கப்பட்ட வேளாண் பகுதிகளாக அறிவிக்கப்பட்ட இடங்களில் எண்ணெய், எரிவாயு எடுக்க ஒன்றிய அரசு ஏலம் அறிவிப்பு வெளியிட்டுள்ள நிலையில், இதுகுறித்து தமிழ்நாடு அறிவியல் இயக்கம் தமிழ்நாடு அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது.
அதில், "ஒன்றிய எரிசக்தி இயக்குநரகம் சார்பாக மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஜூன் 10ஆம் தேதி கண்டறியப்பட்ட சிறு மற்றும் நடுத்தர வகை எண்ணெய் கிணறுகளுக்கான சர்வதேச அழைப்பாணையை தொடங்கி வைத்தார்.
நாடு முழுவதும் 75 இடங்களுக்கான இந்த சுற்றில் தமிழ்நாட்டில், புதுக்கோட்டை மாவட்டத்தில் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல பகுதியிலும் மற்றும் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பகுதிகளையும் உள்ளடக்கி உள்ளது.
மார்ச் 2016இல் மத்திய அரசால் புதிய எண்ணெய் எடுப்புக் கொள்கை ஹெல்ப் (HELP - Hydrocarbon Exploration Licensing Policy) அறிமுகப்படுத்தப்பட்டது.
கைவிடப்பட்ட எண்ணெய் வயல்கள்
அதன் ஒரு பகுதியாக, கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக நாட்டின் எண்ணெய் உற்பத்தியில் ஈடுபட்டு வரும் ஓஎன்ஜிசி மற்றும் ஆயில் இந்தியா ஆகிய பொதுத் துறை நிறுவனங்கள் கச்சா எண்ணெய் எடுக்க கையகப்படுத்திய பகுதிகளில், ஆய்வின் போது வணிக ரீதியாக சாத்தியமில்லை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கைவிடப்பட்ட சிறு மற்றும் நடுத்தர எண்ணெய் வயல்களை, சர்வதேச அளவில் ஏலம் விட முடிவு செய்யப்பட்டு ஏற்கனவே இரண்டு சுற்று ஏலம் முடிவடைந்துள்ளது.
இதன் முதல் சுற்றில், தமிழ்நாட்டின் நெடுவாசல் மற்றும் பாண்டிச்சேரியின் காரைக்கால் பகுதியும் இருந்தது. ஏற்கனவே கச்சா எண்ணெய்க்காக கையகப்படுத்தபட்டுள்ள இந்த பகுதியில், ஹெல்ப் கொள்கை மூலம் ஒற்றை அனுமதி என்கிற பெயரில் கச்சா எண்ணெய் அனுமதியுடன் மீத்தேன், ஷேல் கேஸ், டைட் கேஸ் உள்ளிட்ட பல வகையான எண்ணெய் மற்றும் எரிபொருட்களை எடுப்பதற்கு வழிவகை செய்யப்பட்டது.
இதன் காரணமாக நெடுவாசல் பகுதியில் மக்கள் தொடர் போராட்டங்களை நடத்தினர். அதனை தொடர்ந்து, அந்த பகுதியை ஏலம் எடுத்த, எண்ணெய் எடுக்கும் பணியில் முன் அனுபவம் இல்லாத ஜெம் லேபாரட்டரி நிறுவனம் வேலைகளை தொடங்க மாநில அரசு தடை விதித்தது. அதேபோல் பாண்டிச்சேரி அரசும் தடை விதித்தது.
பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டங்களுக்கு ஆபத்து
காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக 2020 பிப்ரவரியில் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த பகுதியில் புதிதாக எண்ணெய் எடுப்பதற்கு அனுமதி இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது.
இத்தகைய சூழலில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கறம்பக்குடி வட்டத்தில், நெடுவாசலுக்கு அருகே உள்ள ’வடத்தெரு’ பகுதியிலும் மேலும் பவளப்பாறைகள் அதிகம் உள்ள மன்னார் வளைகுடா பகுதியில் (நிலம் மற்றும் ஆழமற்ற கடல் பகுதியில்), ஏற்கெனவே கச்சா எண்ணெய் எடுக்க அனுமதிப்பெற்று சாத்தியமில்லா சூழல் இருந்ததால், ஓஎன்ஜிசி நிறுவனம் அதனைக் கைவிட்டது.
அப்பகுதிகளில், தற்போது பிராக்கிங் உள்ளிட்ட நில மற்றும் நீர் வளத்திற்கு ஆபத்தான முறைகளை கையாள அனுமதிக்கப்பட்ட புதிய முறையில் ஏலம் விடப்பட்டுள்ளதை தமிழ்நாடு அறிவியல் இயக்கம் கவலையோடு பார்க்கிறது.
உடனடியாக மேற்கண்ட பகுதிகளை ஏலத்திலிருந்து விலக்க வேண்டுமென ஒன்றிய அரசை தமிழ் நாடு அறிவியல் இயக்கம் கேட்டுக்கொள்கிறது. இந்த பிரச்னையில் மாநில அரசும், உரிய விதத்தில் தலையிட வேண்டும் எனவும் தமிழ் நாடு அறிவியல் இயக்கம் கேட்டுக் கொள்கிறது" என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.