சென்னை:ஒன்றிய அரசின் சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா நடத்திய ஆலோசனை கூட்டத்தில், சென்னை, தமிழ்நாடு அரசு பன்னோக்கு சிறப்பு மருத்துவமனை அலுவலகத்திலிருந்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்
வீடியோ கான்பரன்சிங் மூலம் நடைபெற்ற காசநோய், கண்புரை சிகிச்சை மற்றும் கோவிட் 19 தடுப்பூசி தொடர்பான ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்றார்.
இக்கூட்டத்தில் அவர், "தமிழ்நாட்டில் 18 வயதிற்கு மேற்பட்டோரின் எண்ணிக்கை 5.78 கோடி ஆகும். இதில் 12-06-2022 வரை 11.33 கோடி (94.31 சதவீதம்) டோஸ்கள் முதல் தவணையாகவும், 84.82 சதவீதம் டோஸ்கள் இரண்டு தவணையும் பெற்றுள்ளனர். தமிழ்நாட்டில் 12 ஆம் தேதி வரையில் 30 மெகா கோவிட் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது. இதில் மொத்தம் 4.44 கோடி பேர் பயனடைந்துள்ளனர்.
ஒன்றிய அரசின் வழிகாட்டுதலின் படி தமிழ்நாட்டில் வீடு வீடாக சென்று தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்றது. இதில் முதல் தவணையாக 75,38,578 லட்சம் பயனாளிகளும், இரண்டாம் தவணையாக 1,32,34,062 கோடி பயனாளிகள் பயனடைந்துள்ளனர். தற்போது வீடுவீடாக சென்று தடுப்பூசி செலுத்தும் திட்டம் 2.0 தொடங்கப்பட்டு முதல் தவணையாக 2,52,307 லட்சம் பயனாளிகளும், இரண்டாம் தவணையாக 10,74,114 லட்சம் பயனாளிகள் பயனடைந்துள்ளனர்.
தமிழ்நாட்டில் காசநோயை கண்டறிவதற்காக 18 நடமாடும் எக்ஸ்ரே வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளன. அவை விரைவில் முதலமைச்சரால் தொடங்கப்படும். காச நோயாளிகளுக்கான கூடுதல் ஊட்டச்சத்துக்கான சமூக ஆதரவு தொடங்கப்பட்டு, அதற்கான விரிவாக்கம் திட்டமிடப்பட்டுள்ளது. கண் புரையில்லா மாநிலமாக தமிழ்நாட்டை மாற்ற தேவையான கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, அதன் அடிப்படையில் தேவையான அனைத்து நபர்களுக்கு கண்புரை அறுவை சிகிச்சை மேற்கொள்ள பட உள்ளது. ஒன்றிய அரசு கோவிட் தடுப்பூசி மற்றும் இதர சுகாதார சேவைகளுக்கு தமிழ்நாடு அரசிற்கு தொடர்ந்து அளித்துவரும் ஒத்துழைப்புக்கு நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம்" எனப் பேசினார்.
இதையும் படிங்க:படிக்காமலேயே சாதிக்கலாம் என்று சொல்வது சூழ்ச்சி: முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு!