தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

கங்கைகொண்ட சோழபுரம் கோயில் வழக்கு: விளக்கமளிக்க நீதிமன்றம் உத்தரவு - கங்கைகொண்ட சோழபுரம் கோயில் வழக்கு

கங்கைகொண்ட சோழபுரம் கோயிலின் பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் கட்டுமானங்கள் மேற்கொள்ள அனுமதி பெறப்பட்டதா? இல்லையா? என விளக்கமளிக்க மத்திய தொல்லியல் துறைக்கும், தமிழ்நாடு இந்துசமய அறநிலையத் துறைக்கும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

gangaikondacholaburam
கங்கைகொண்ட சோழபுரம் கோயில் வழக்கு

By

Published : Feb 7, 2022, 2:07 PM IST

சென்னை: அரியலூர் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரத்தில், முதலாம் ராஜேந்திர சோழன் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட கங்கைகொண்ட சோழீஸ்வரர் கோயில், ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்தது.

யுனெஸ்கோவால் புராதன சின்னமாக அறிவிக்கப்பட்ட இக்கோயிலில், பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் கட்டுமானங்கள் மேற்கொள்ள தடைவிதிக்கக் கோரி, தஞ்சாவூர் மாவட்ட கும்பகோணம் தாலுகா, டி. மாங்குடியைச் சேர்ந்த வழக்கறிஞர் பாலகுரு என்பவர் பொது நல வழக்கைத் தாக்கல்செய்துள்ளார்.

அந்த மனுவில், "தொல்லியல் துறை சார்பில் இந்தக் கோயிலில் மூன்று கோடி ரூபாய் செலவில் புத்தக நிலையம், உணவகம், கழிப்பறைகள் என அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

பாதுகாக்கப்பட்ட கோயிலில் புதிய கட்டுமானங்களை மேற்கொள்ள சட்டப்படி சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் அனுமதி பெற வேண்டும். அனுமதியில்லாமல் கட்டுமானங்கள் மேற்கொள்வது குற்றம்.

தடைசெய்யப்பட்ட பகுதிகளில் கட்டுமானங்கள் மேற்கொள்வது குறித்து தகவல் உரிமைச் சட்டத்தின்கீழ் விளக்கம் கேட்டும், அதற்குத் தொல்லியல் துறை எந்தப் பதிலும் அளிக்கவில்லை. ஆன்மிக நடவடிக்கையாக இல்லாமல், வர்த்தக நடவடிக்கையான இந்த வசதிகளை கோயிலுக்கு வெளியில் செய்துகொடுக்கலாம்.

தொல்லியல் துறையின் இந்த நடவடிக்கை வேலியே பயிரை மேய்வதைப் போன்றது என்பதால், கோயிலில் பாதுகாக்கப்பட்ட பகுதியில் கட்டுமானங்கள் மேற்கொள்ள தடைவிதிக்க வேண்டும். புதிய கட்டுமானங்களை அப்புறப்படுத்தி, பழைய நிலைக்கு மீட்டெடுக்க உத்தரவிட வேண்டும்" எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த பொறுப்புத் தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி, நீதிபதி பரதசக்கரவர்த்தி அடங்கிய அமர்வு, கட்டுமானங்கள் புராதன சின்னத்திலிருந்து எவ்வளவு தூரத்தில் மேற்கொள்ளப்படுகின்றன, கட்டுமானங்களுக்கு அனுமதி பெறப்பட்டதா? என்பது குறித்து விளக்கமளிக்க, மத்திய தொல்லியல் துறைக்கும், தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறைக்கும் உத்தரவிட்டு, விசாரணையைத் தள்ளிவைத்தது.

இதையும் படிங்க: சட்டம் ஒழுங்கு நிலவரம் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை

ABOUT THE AUTHOR

...view details