தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

CAA-க்கு எதிராக நள்ளிரவில் போராடிய இஸ்லாமிய அமைப்பினர் மீது வழக்குப்பதிவு! - குடியுரிமை சட்டத் திருத்த போராட்டம்

சென்னை: குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக நேற்று இரவுப் போராட்டம் நடத்திய இஸ்லாமிய அமைப்பினர் மீது, காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

protest
protest

By

Published : Feb 15, 2020, 2:56 PM IST

சென்னை - பழைய வண்ணாரப்பேட்டையில், குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராகப் பல்வேறு இஸ்லாமிய இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் சுமார் 500க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல் துறையினர் கலைந்து போகக் கூறியதால் அவர்களுக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் காவல் துறையினர் லேசான தடியடி நடத்தி போராட்டக்காரர்களைக் கலைத்தனர். இதில் போராட்டத்தில் ஈடுபட்ட 3 பேர் காயம் அடைந்தனர். அப்போது நடத்தப்பட்ட கல்வீச்சில் இணை ஆணையர் கபில் சிபல் உட்பட 5 காவல் துறையினரும் காயம் அடைந்தனர். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட 120 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில், காவல் துறை நடத்திய தடியடி மற்றும் கைதைக் கண்டித்து, சென்னை உட்பட தமிழ்நாடு முழுவதும் உள்ள இஸ்லாமிய அமைப்பினர் நள்ளிரவில் போராட்டத்தில் குதித்தனர். குறிப்பாக சென்னை அண்ணா சாலை தர்கா, ஆலந்தூர் மெட்ரோ நிலையம், திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையில் சுமார் 1000க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் மதுரை, வேலூர், கன்னியாகுமாரி, கோயம்புத்தூர் உள்ளிட்டப் பகுதிகளிலும் இஸ்லாமிய அமைப்பினர் போராட்டம் நடத்தினர். இதனால் பல்வேறு இடங்களில் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது.

இதனையடுத்து சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் நிகழ்விடத்திற்கு நேரில் சென்று, போராட்டத்தில் ஈடுபட்ட அமைப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். கைது செய்யப்பட்ட 120 பேரும் விடுவிக்கப்படுவார்கள் என அவர் உறுதி கூறியதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

இந்நிலையில், குடியுரிமை திருத்தச் சட்ட எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட, இஸ்லாமிய அமைப்பினர் மீது வண்ணாரப்பேட்டை, கிண்டி, ரெட் ஹில்ஸ் ஆகிய காவல் நிலையங்களில் சட்டவிரோதமாகக் கூடுதல், அனுமதியின்றி போராட்டம் நடத்துதல் ஆகிய 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் வரும் 13ஆம் தேதியிலிருந்து 28ஆம் தேதி வரை, எந்த விதமான போராட்டங்கள் நடத்தவும் காவல் துறை அனுமதி இல்லை என காவல் ஆணையர் ஏற்கெனவே உத்தரவு பிறப்பித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக தீர்மானம் வேண்டும் - எஸ்.டி.பி.ஐ வலியுறுத்தல்

ABOUT THE AUTHOR

...view details