சென்னை:வண்ணாரப்பேட்டை 49-ஆவது வார்டு மாநகராட்சி தேர்தலில் திமுக சார்பில் இளைய அருணா, அதிமுக சார்பில் ஏ.டி அரசு, பாஜக சார்பில் வன்னியராஜ் உள்ளிட்டோர் போட்டியிட்டனர்.
அப்போது வாக்குப்பதிவானது நடந்து வந்த நிலையில் திமுக வேட்பாளர் இளைய அருணா தலைமையில் திமுகவினர் 49 வார்டு வாக்குசாவடிகளை கைப்பற்றி கள்ளஓட்டு போட முயற்சிப்பதாக அதிமுகவினருக்கு தகவல் கிடைத்ததாக கூறப்படுகிறது.
இதனால் அங்கு வந்த அதிமுக மற்றும் பாஜகவினர், திமுகவினரை தட்டிக்கேட்ட போது கைகலப்பாக மாறியது. இதில் ஆத்திரமடைந்த திமுகவினர், அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் ஓட்டுநர் ஜெகன், பாஜக பிரமுகர் ராமையா ஆகியோரை தாக்கியதாக கூறப்படுகிறது.
பின்னர் இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் திமுகவை சேர்ந்த ஒருவரை தாக்கி அரை நிர்வாணமாக இழுத்து சென்றதாக கூறப்படுகிறது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
இதனையடுத்து திமுகவை சேர்ந்த நரேஷ், அதிமுக ஜெயக்குமார் உட்பட அதிமுகவினர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதே போல் அதிமுகவை சேர்ந்த ஜெகநாதனும் திமுகவினர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.