சென்னை: எருக்கஞ்சேரி பகுதியை சேர்ந்தவர் பார்த்தசாரதி (55). இவர், பாரதிய ஜனதா கட்சியில் பெரம்பூர் கிழக்கு பகுதி வழக்குரைஞர் பிரிவு தலைவராக இருந்து வருகிறார்.
தனக்கும், தனது மகள்களுக்கும் பாலியல் துன்புறுத்தல் கொடுத்துவருவதாக பார்த்தசாரதி மீது அதே பகுதியைச் சேர்ந்த பெண் ஜூலை 12ஆம் தேதி காவல் ஆணையரிடம் புகார் ஒன்றை அளித்தார். அந்தப் புகாரில், "எனது 15, 9 வயதுள்ள மகள்கள் இருவரும் பள்ளியில் பயின்று வருகின்றனர். எதிர் வீட்டில் வசித்து வரக்கூடிய பாஜக பிரமுகர் பார்த்தசாரதி தொடர்ந்து எனக்கும், எனது மகள்களுக்கும் பாலியல் துன்புறுத்தல் கொடுக்கிறார்.
நடவடிக்கை எடுக்கக்கோரி புகார்
இதுதொடர்பாக, ஏற்கெனவே கொடுங்கையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததால் 2018ஆம் ஆண்டு பார்த்தசாரதி கைது செய்யப்பட்டு, அன்றைய நாளே பிணையில் வெளியே வந்தார். வெளியேவந்த பார்த்தசாரதி மீண்டும் பாலியல் துன்புறுத்தல் கொடுக்க தொடங்கிவிட்டார். எனவே, உடனடியாக பார்த்தசாரதி மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்" எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்தப் புகார் கொடுங்கையூர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டது. புகார் தொடர்பாக பார்த்தசாரதி மீது பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட ஆறு பிரிவுகளின்கீழ் கொடுங்கையூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதையும் படிங்க: 'பணியிட மோசடி வழக்கின் குற்றப்பத்திரிகையைப் பெற்றுக் கொண்ட செந்தில்பாலாஜி!'