தமிழ்நாடு

tamil nadu

By

Published : May 28, 2021, 7:32 PM IST

Updated : May 28, 2021, 10:54 PM IST

ETV Bharat / city

போக்சோவில் சிக்கிய தடகளப் பயிற்சியாளர் நாகராஜன் திடீர் தற்கொலை முயற்சி

தடகள பயிற்சியாளர் நாகராஜன்
தடகள பயிற்சியாளர் நாகராஜன்

19:26 May 28

பயிற்சி வீராங்கனைக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தாக எழுந்தப் புகாரில் தடகளப் பயிற்சியாளர் மீது போக்சோ சட்டம் உட்பட 5 பிரிவுகளின்கீழ் காவலர்கள் வழக்குபதிவு செய்யப்பட்ட நிலையில், அதிர்ச்சியில் பயிற்சியாளர் நாகராஜன் தற்கொலைக்கு முயன்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை: பூக்கடை அனைத்து மகளிர் காவல் ஆய்வாளரிடம் கடந்த 28ஆம் தேதி சுமார் 19 வயதுடைய பெண் ஒருவர், தடகள பயிற்சியாளர் நாகராஜன் என்பவர் மீது புகார் ஒன்றை அளித்தார்.  

பயிற்சியில் பாலியல் தொல்லை

அவர் கடந்த 2013ஆம் ஆண்டு முதல் 2020 வரை சென்னை பிராட்வே பச்சையப்பன் பள்ளி விளையாட்டு மைதானத்தில் தடகளப் பயிற்சி பெறுவதற்காக பயிற்சியாளர் நாகராஜனிடம் சேர்ந்து பயிற்சி பெற்றுள்ளார்.

2013ஆம் ஆண்டிலிருந்து பயிற்சியாளர் நாகராஜன் பல பெண்களுக்கு தடகளப் பயிற்சி வழங்கி வந்துள்ளார். பல சமயங்களில் அன்றைய பயிற்சி முடித்த பின்பு, மற்ற பெண்களை அனுப்பிவிட்டு பிசியோதெரபி பயிற்சி வழங்குவதாகக் கூறி, அந்த வளாகத்தில் உள்ள அறையில் அமர வைத்தும், படுக்க வைத்தும் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். 

இதனை மறுத்தபோதும் தன்னுடன் ஒத்துழைத்தால் தடகளப் போட்டிகளில் சிறப்பாக உயர்த்திவிடுவேன் என்று கூறி பாலியல் சீண்டல்களில் தொடர்ச்சியாக ஈடுபட்டுள்ளார்.

மிரட்டல் விடுத்த நாகராஜன் 

மேலும், பயிற்சிக்கு வந்த மற்ற சில பெண்களிடமும் பயிற்சியாளர் நாகராஜன் பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டுள்ளார். பயிற்சி பெறக்கூடிய 19 வயது பெண், அவருக்கு ஒத்துழைக்காததால் பயிற்சியாளர் நாகராஜன் அவருக்கு வழங்கிய தடகளப் பயிற்சியை நிறுத்தியும், 'ஏதேனும் பிரச்னைகளை செய்தால் உன்னையும் உன் குடும்பத்தையும் கொலை செய்து விடுவேன்' என்று மிரட்டியும் உள்ளார்.

மேலும், 'தடகளப் போட்டிக்கான பயிற்சி மையங்களில் உன்னைப் பற்றி தவறாக சொல்லிவிட்டு, எந்தப் போட்டியிலும் கலந்து கொள்ள விடமாட்டேன்' எனவும் கூறியதால் மன உளைச்சலோடு அந்தப் பெண் பாலியல் சீண்டல் சார்ந்த விவரங்களை யாரிடமும் கூறாமல் இருந்துள்ளார். 

பயிற்சியாளர் நாகராஜன் அப்பெண்ணைப் பற்றி அனைவரிடமும் அவதூறாக கூறி வந்த நிலையில் பெண்ணின் பெற்றோர் சென்னையிலிருந்து வேறு மாவட்டத்திற்கு பயிற்சி பெற அப்பெண்ணை அனுப்பி வைத்தனர். நாகராஜன் அப்பெண்ணுக்குத் தெரிந்த நபர்களிடம் எல்லாம் எந்தப் போட்டிகளிலும் அந்த பெண்ணை கலந்து கொள்ள விடமாட்டேன் எனக் கூறி வந்துள்ளார்.

புகார் அளித்தவுடன் போக்சோ

பாதிக்கப்பட்ட பெண் இன்று (மே 28) பூக்கடை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இப்புகாரின் பேரில் நந்தனத்தைச் சேர்ந்த தடகளப் பயிற்சியாளர் நாகராஜன் மீது போக்சோ சட்டம் உள்ளிட்ட ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. நாகராஜன் ஜி.எஸ்.டி துறையில் கண்காணிப்பாளராகவும் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில் பயிற்சியாளர் நாகராஜன் திடீரென தூக்க மாத்திரைகளை உட்கொண்டு அரசு ராயப்பேட்டை மருத்துவமனையில் உள்நோயாளியாக சிகிச்சைப் பெற்று வருகிறார். எனவே, பயிற்சியாளர் நாகராஜனால் பாலியல் சீண்டலில் பாதிக்கப்பட்ட பெண்கள் தயங்காமல் புகார் அளிக்கலாம் என்றும், பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்புப் பிரிவு, காவல் துணை ஆணையர் ஜெயலஷ்மியை (கைப்பேசி எண்: 9444772222) தொடர்பு கொள்ளலாம் எனவும், புகார் வழங்குபவர்களின் விவரங்கள் பற்றிய ரகசியம் காக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.

பொருளாதாரத்தில் பின்தங்கிய பயிற்சி வீராங்கனைகளை குறிவைத்து பாலியல் தொந்தரவு செய்ததாக எழுந்தப் புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: பாலியல் தொந்தரவு அளித்த சேத்துப்பட்டு பள்ளி ஆசிரியர்: வெளியான அதிர்ச்சித் தகவல்கள்!

Last Updated : May 28, 2021, 10:54 PM IST

ABOUT THE AUTHOR

...view details