சென்னை:தொழிலதிபர் கிருஷ்ணமூர்த்தி என்பவர் சென்னை மத்திய குற்றப்பிரிவில் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் 2015ஆம் ஆண்டு தொழிலதிபர் கிருஷ்ணமூர்த்தி ஒரு கோடி ரூபாய் பணத்தை 24 விழுக்காடு வட்டிக்கு முன்னாள் ஐபிஎஸ் அலுவலர் சிவனாண்டியிடம் கொடுத்துள்ளார். மூன்று மாதத்தில் பணத்தை வட்டியுடன் திருப்பித் தருவதாக சிவனாண்டி கடன் பத்திர ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார்.
குறிப்பாக கடலூரில் தனியார் ஆயில் சுத்திகரிப்பு நிறுவனத்துடன் சேர்ந்து தொழில் செய்வதற்காக இந்த பணத்தை சிவனாண்டி பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோடி ரூபாய் பணம் மோசடி
தற்போது சாட்சியான தலைமை காவலர் மணிமாறன் உயிரிழந்து விட்டதாகவும், பணம் கொடுத்த பிறகு முதல் ஐந்து மாதத்திற்கு மட்டுமே வட்டியை சிவனாண்டியின் நண்பரான கணபதி ராமசுப்பிரமணியன் செலுத்தியதாக தெரிவித்துள்ளார். அதன் பிறகு கடன் பத்திரத்தின் அடிப்படையில் சிவனாண்டி பணத்தைத் திருப்பித் தரவில்லை எனவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இதேபோல் கடந்த 2002ஆம் ஆண்டு 50 லட்சம் ரூபாய் பணம் கடனாக கொடுத்ததாகவும், திருநெல்வேலி அருகே தலையுத்து என்ற பகுதியில் சுப்பிரமணியன் என்ற தொழிலதிபரோடு குளிர்பான தொழிற்சாலை ஆரம்பித்து அதில் பங்குதாரராக சேர்த்துக் கொள்வதாக கூறி ஏமாற்றியதாகவும் தெரிவித்துள்ளார்.