தமிழ்நாடு

tamil nadu

By

Published : Nov 7, 2021, 2:14 PM IST

ETV Bharat / city

இருப்பு சாட்சிகளை பயன்படுத்தி விசாரணை - ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் கண்டனம்

காவல் நிலையங்களில் உள்ள இருப்பு சாட்சிகளை பயன்படுத்தி குற்ற வழக்குகளின் விசாரணை நடைபெறாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க சென்னை மாநகர காவல் ஆணையருக்கு ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஜார்ஜ் நீதிமன்றம்
ஜார்ஜ் நீதிமன்றம்

சென்னை:திருவொற்றியூர் காவல் நிலையத்தின் முதல் நிலை காவலராக பணியாற்றி வந்தவர் செல்வகுமார். இவர் 2015ஆம் ஆண்டு வண்ணாரப்பேட்டை பகுதியில் கடைக்கு பால் வாங்க சென்றபோது வாசுதேவன், சரண் ராஜ், ரமேஷ், சண்முகம் ஆகிய 4 பேரும் உருட்டு கட்டை உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து புது வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த சென்னை ஜார்ஜ் டவுன் 15ஆவது பெருநகர குற்றவியல் நீதிமன்ற நீதிபதி முரளி கிருஷ்ணன் ஆனந்தன், "இருப்பு சாட்சிகள் பிறழ் சாட்சிகளாக மாறும் நிலையில் அவர்களை குறுக்கு விசாரணை செய்தபோது, காவல் நிலையத்தில் அதிகாரப்பூர்வமாக வெளிவராத பல சம்பவங்கள் வெளி வந்துள்ளது.

வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் இருப்பு சாட்சிகளை வைத்திருக்கும் சம்பவங்களும், அவர்களை எவ்வாறு விசாரணைக்கு பயன்படுத்துகிறார்கள் என்பதையும் இந்த வழக்கு வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது.

குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் விடுதலை

காவல் துறை தரப்பில் அளிக்கப்பட்ட சாட்சிகள் முழுமையாக இல்லை. காவல் நிலையங்களில் அதிகாரப்பூர்வமற்ற முறையில் பணியாற்றும் பணியாளர்கள் சிலர் இருப்பு சாட்சிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். இதுபோன்ற சில கசப்பான சம்பவங்கள் நடைபெற்று வருகிறது" என கருத்து தெரிவித்தார்.

மேலும், காவல் நிலையங்களிலுள்ள இருப்பு சாட்சிகளை பயன்படுத்தக் கூடாது என்பதற்கான உறுதியான சில நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை மாநகர காவல் ஆணையருக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

இவ்வழக்கில், குற்றஞ்சாட்டபட்டவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்படாததால் அவர்களை விடுதலை செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

இதையும் படிங்க:ஏற்காட்டில் கூட்டுறவு பயிற்சி நிலையம் - கட்டுமான பணிகளை நிறுத்த உத்தரவிட்டதை எதிர்த்து வழக்கு

ABOUT THE AUTHOR

...view details