தமிழ்நாடு

tamil nadu

கரோனா தடுப்பு விதிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேட்பாளர்களுக்கு அறிவுரை!

By

Published : Mar 26, 2021, 10:00 PM IST

சென்னை: தேர்தல் பரப்புரையின்போது, கரோனா தொற்றுப் பரவல் தடுப்பு விதிகளைப் பின்பற்ற வாக்காளர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என வேட்பாளர்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

hc
hc

தேர்தல் பரப்புரையின்போதும், வாக்குப்பதிவின்போதும், கரோனா தடுப்பு விதிமுறைகளைக் கண்டிப்புடன் பின்பற்ற உத்தரவிடக் கோரி வழக்கறிஞர் தொண்டன் சுப்பிரமணி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்ஜிவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு, தேர்தலின்போது கரோனா தடுப்பு விதிகளைக் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என மாநில அரசுக்கும், தேர்தல் ஆணையத்திற்கும் உத்தரவிட்டுள்ளதாகக் குறிப்பிட்டது.

தற்போது இரண்டாவது அலை பரவிவரும் நிலையில், தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடிய நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும், வேட்பாளர்களும் பொறுப்புடன் செயல்பட வேண்டும், கரோனா தடுப்பு விதிகள் முறையாகப் பின்பற்றப்படுவதை உறுதிசெய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தினர்.

வேட்பாளர்கள் தேர்தல் பரப்புரையின்போது, கரோனா தொற்றுப் பரவல் தடுப்பு விதிகளைப் பின்பற்ற வேண்டும் என வாக்காளர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும் அது அவர்களின் கடமை என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

வாக்குப்பதிவு நாளில், வாக்காளர்களை வரிசையில் நிற்க வைக்கும்போதும், கரோனா தடுப்பு வழிகளைத் தேர்தல் ஆணையம் மனத்தில் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்திய நீதிபதிகள், கரோனா தடுப்பு விதிகளை அமல்படுத்த மாநில அரசு அனைத்து உதவிகளையும் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தினர்.

ஊடகங்கள் வாயிலாக இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும், அதன்மூலம் தொற்றுப் பரவ மேலும் அதிகரிக்காமல் தடுக்க முடியும் என்றும் கூறி வழக்கை முடித்துவைத்தனர்.

ABOUT THE AUTHOR

...view details