தமிழ்நாட்டில் அரசுப் பள்ளியில் 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையில் படித்து நீட் தேர்வில் தகுதி மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு, மருத்துவப் படிப்பில் 7.5 விழுக்காடு உள் இட ஒதுக்கீடு இந்தாண்டு முதல் வழங்கப்பட்டுள்ளது. எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ்., படிப்பில் சேர்வதற்கு நீட் தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர்கள் விண்ணப்பம் செய்து வருகின்றனர். அரசுப் பள்ளியில் படித்த மாணவர்களில் மீண்டும் தேர்வெழுதிய மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற்றுள்ளனர்.
அரசுப் பள்ளி மாணவர்களுக்கான ஒதுக்கீட்டு இடங்களைப் பெறுவதற்கு விண்ணப்பம் செய்யும் மாணவர்கள், பிற சான்றிதழ்களுடன் 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையில் அரசுப் பள்ளியில் படித்ததற்கான அத்தாட்சி சான்றிதழை பெற்று சமர்பிக்க வேண்டும்.
இது குறித்து பள்ளிக் கல்வித்துறை செயலருக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் அனுப்பியுள்ள கடிதத்தில், "அரசுப் பள்ளி மாணவர்களின் மருத்துவப் படிப்புக்கான 7.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டில் சேர விரும்பும் மாணவர்கள் 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையில் அரசுப் பள்ளியில் படித்ததற்கான அத்தாட்சி சான்றிதழ் பெற்று ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
மாணவர்கள் பல்வேறு பள்ளிகளில் படித்திருந்தாலும் அனைத்துப் பள்ளியிலும் படித்த விவரத்தையும் அளிக்க வேண்டும். மாணவர்களின் சான்றிதழ்களை ஆய்வு செய்ய குழு அமைக்கப்படும். மாணவர்கள் அளித்த சான்றிதழ்களில் தவறுகள் இருப்பது கண்டறியப்பட்டால், அவர்களின் சேர்க்கை எந்த விதமான முன்னறிவிப்பும் இன்றி ரத்து செய்யப்படும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.