மறைந்த முதலமைச்சர் எம்ஜிஆர் பிறந்தநாள் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, 10 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் உள்ள ஆயுள் தண்டனை கைதிகள், 60 வயதுக்கு மேல் உள்ள ஆயுள் கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்து தமிழ்நாடு அரசு 2018ஆம் ஆண்டு அரசாணை பிறப்பித்தது.
இதனை மேற்கோள் காட்டி, சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஆயுள் தண்டனை கைதி பழனிசாமியை விடுவிக்கக் கோரி அவரது மனைவி அரசுக்கு கோரிக்கை மனு அளித்தார். அதற்கு தமிழ்நாடு அரசு தரப்பில், பழனிசாமி 9 ஆண்டுகள் 24 நாட்கள் மட்டுமே தண்டனை அனுபவித்துள்ளதாகக் கூறி விடுவிக்க மறுப்பு தெரிவித்தது.
அதைத்தொடர்ந்து பழனிசாமி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, கோவை சிறையில் விசாரணை கைதியாக இருந்த 349 நாள்களையும் கணக்கில் கொள்ள வேண்டும் என மனுவில் குறிப்பிட்டார். அந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி கடந்தாண்டு மே மாதம் பழனிசாமியை விடுதலை செய்யக்கோரி தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டிருந்தார்.