சித்த மருத்துவர் தணிகாசலம் குண்டர் சட்டத்தில் கைதுசெய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம், மத்திய ஆயுஷ் அமைச்சகம், தமிழ்நாடு அரசு ஆகியவற்றிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பியிருந்தது. சித்த மருத்துவத்தை மேம்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் விளக்கமளிக்க உத்தரவிட்டிருந்தது.
இதற்குப் பதிலளித்துள்ள மத்திய ஆயுஷ் அமைச்சகம், கடந்த 10 ஆண்டுகளில், சித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட துறைகளுக்கு 239 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது. கரோனா சிகிச்சைக்கு கபசுரக் குடிநீர், நொச்சி குடிநீர், திப்பிலி ரசாயனம் உள்ளிட்ட மருந்து வகைகளின் திறன் குறித்தும் ஆராய்ச்சிகள் நடந்துவருவதாகவும் சித்தா, யுனானி, ஆயுர்வேத மருந்துகளின் மூலம் கரோனாவைத் தடுக்க முடியுமா என்பது தொடர்பான தொடர் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாகவும் தெரிவித்துள்ளது.
மேலும், சித்த மருத்துவத்தின் மூலம் கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஏற்கனவே வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளதாகவும் பதில் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு சுகாதாரத் துறைச் செயலர் ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்த பதில் மனுவில், "மத்திய ஆயுஷ் அமைச்சக வழிகட்டுதலின் பேரில் கரோனா சிகிச்சைக்கு இந்திய மருத்துவ முறைகளைப் பயன்படுத்த முடியுமா என்று ஆய்வுசெய்ய இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை இயக்குநர் தலைமையில் தமிழ்நாடு அரசு, குழு ஒன்றை அமைத்துள்ளது.
அக்குழு அளித்த பரிந்துரையை ஏற்று தற்போது 'ஆரோக்யம்' என்ற பெயரில் ஆயுர்வேதா, சித்தா, யோகா, யுனானி, ஹோமியோபதி உள்ளிட்ட இந்திய மருத்துவ முறைகளை உள்ளடக்கி கரோனா நோயாளிகளுக்கு நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க மருந்துகள் வழங்கப்பட்டுவருகின்றன.