ஆனால், கிராமப்புற, நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கான அதிகாரங்களைப் பகிர்ந்தளிப்பது, நிதிப் பகிர்வு, உள்ளாட்சிகளை வலுப்படுத்தும் உரியச் சட்டத் திருத்தங்கள் கொண்டு வருவது உள்ளிட்ட எந்த வாக்குறுதியும் திமுக, அஇஅதிமுக உள்ளிட்ட முக்கிய கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளில் இடம்பெறாதது, மாநில சுயாட்சி பேசும் கட்சிகள் உள்ளாட்சிகளை ஒரு பொருட்டாகக் கருதவில்லை என்பதையே காட்டுகிறது.
கட்சிகளின் தேர்தல் அறிக்கைகள்
உள்ளாட்சிகளுக்கான அதிகாரப்பரவல் குறித்து எந்த வாக்குறுதியும் அளிக்காத தமிழ்நாட்டின் முக்கியக் கட்சிகளான திமுக, அதிமுகவின் தேர்தல் அறிக்கைகள் பெருத்த ஏமாற்றம் அளிக்கின்றன. கிராம சபைகளை வலுப்படுத்துவது பற்றியோ, பொதுவான நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கான சட்டங்கள் கொண்டு வருவது குறித்தோ, ஏரியா சபை, வார்டு கமிட்டிகள் அமைப்பது பற்றியோ, தொடர்ந்து தடைப்பட்டு வரும் உள்ளாட்சிகளுக்கான முறையான நிதிப் பகிர்வு, அதிகாரப் பகிர்வு குறித்தோ எந்த ஒரு வாக்குறுதியையும் இந்தக் கட்சிகள் தராதது வருத்தமளிக்கிறது.
பாட்டாளி மக்கள் கட்சி வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையிலும் உள்ளாட்சிகள் குறித்து எந்தவொரு வாக்குறுதியும் வழங்கப்படவில்லை. இன்னும் சில முக்கிய கட்சிகளின் தேர்தல் அறிக்கைகள் வெளியாகவில்லை. மக்கள் நீதி மய்யம், தங்கள் முழுமையான தேர்தல் அறிக்கையை இன்னும் வெளியிடாத நிலையில், கடந்த மாதம் உள்ளாட்சிகளுக்கான சில குறிப்பிடத் தகுந்த வாக்குறுதிகளை வழங்கி உள்ளது. அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் வெளியிட்டுள்ள சில வாக்குறுதிகளில், உள்ளாட்சிகளில், மாற்றுத்திறனாளிகளுக்கான 3 சதவிகித இட ஒதுக்கீடு பற்றிக் குறிப்பிட்டுள்ளது. இந்த முன்னெடுப்புகள் முழுமையானவையல்ல என்ற போதும் நிச்சயம் வரவேற்கத்தக்கவை.
சமூக அமைப்புகளின் தொடர் கோரிக்கை
2016இல் நடக்க வேண்டிய உள்ளாட்சித் தேர்தல்களில், ஊரக உள்ளாட்சித் தேர்தல்கள் மட்டும் 3 ஆண்டுகள் கழித்து 2019இல் நடைபெற்றன. அதிலும் புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களில் இன்னும் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவில்லை. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்கள் 4 வருடங்களுக்கு மேலாகியும் இன்னும் நடந்தபாடில்லை. 2020ஆம் ஆண்டு ஜனவரி 26க்குப் பிறகு ஓராண்டுக்கு மேலாக கிராமசபைக் கூட்டங்கள் நடக்கவில்லை. ஊராட்சிகள் கடும் நிதி நெருக்கடியில் தவிக்கின்றன. ஊராட்சிமன்றத் தலைவர்கள் வீதிக்கு வந்து போராடுகின்றனர். ஊராட்சி விவகாரங்களில் மாவட்ட நிர்வாகம் தலையிடுவதாக நீதிமன்றங்களில் வழக்குகளும் தொடுக்கப்பட்டன. இவையனைத்தும் அஇஅதிமுக ஆட்சியில் நடந்தவை என்பதை இங்கு பதிவு செய்ய வேண்டியுள்ளது.
இந்தச் சூழலில்தான், உள்ளாட்சிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய சீர்திருத்தங்கள் குறித்துப் பல சமூக அமைப்புகளும் உள்ளாட்சி பிரதிநிதிகளும் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறார்கள்.
கிராமசபையும், உள்ளாட்சி கோரிக்கைகளும்!
கடந்த அக்டோபர் 2இல் கிராமசபைக் கூட்டம் அறிவிக்கப்பட்டு பின்பு ரத்து செய்யப்பட்ட போது, அதனை உடனடியாக நடத்த வலியுறுத்தி சமூக இயக்கங்கள் பல முன்னெடுப்புகளை மேற்கொண்டன. அக்டோபர் 2இல் கிராமசபைக் கூட்டத்தில் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராகத் தீர்மானங்களை நிறைவேற்ற அழைப்பு விடுத்தன திமுக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள்.