சென்னை:கரோனா தொற்றுப் பரவல், தேர்தல் பணிகள் எனத் தொடர்ச்சியாக ஓய்வின்றி பணியாற்றிவரும் தமிழ்நாடு காவல் துறையினருக்குப் பணிச்சுமையால் மன அழுத்தம் ஏற்பட்டு தற்கொலை செய்துகொள்ளும் சம்பவங்கள் அரங்கேறின. அதேபோல நோய்த் தொற்றில் பாதிக்கப்பட்டும் காவலர்கள் பலர் உயிரிழந்தனர்.
இந்நிலையில் டிஜிபி சைலேந்திரபாபு காவலர்களின் பணிச்சுமையைக் குறைக்கும் வகையில் அனைத்து காவலர்களுக்கும் வாரம் ஒருநாள் விடுப்பு வழங்கி உத்தரவிட்டதுடன் தமிழ்நாட்டிலுள்ள காவல் ஆளிநர்களுக்கு ‘உங்கள் துறையில் முதலமைச்சர்’ திட்டத்தின்கீழ் காவலர் குறைதீர்ப்பு முகாம் நடத்தி குறைகளுக்குத் தீர்வு காணவும், எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கையை காவல் துறை தலைமையகத்திற்குச் சமர்ப்பிக்குமாறு அனைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள், மாநகர காவல் ஆணையர்களுக்குச் சுற்றறிக்கை அனுப்பியிருந்தார்.
குறைதீர்ப்பு முகாம்
அந்த வகையில் ‘உங்கள் துறையில் முதலமைச்சர்’ திட்டத்தின்கீழ் சென்னையில் பணிபுரியும் காவல் ஆளிநர்களுக்கான குறைதீர்ப்பு முகாம் சென்னையில் டிஜிபியுமான சைலேந்திரபாபு தலைமையில் வருகிற 8ஆம் தேதி காலை 11 மணி முதல் டிஜிபி அலுவலகத்தில் நடைபெறும் எனக் காவல் துறை தலைமையகம் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, கடலூர், வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த காவலர்கள் வரும் 3ஆம் தேதி காலை 10 மணி முதல் சென்னை ஆலந்தூரில் உள்ள வடக்கு மண்டல ஐஜி அலுவலகத்திலும் - கோவை புறநகர், திருப்பூர் புறநகர், ஈரோடு, நீலகிரி, சேலம் புறநகர், தருமபுரி, நாமக்கல், கிருஷ்ணகிரி, கோவை மாநகர், திருப்பூர் மாநகர், சேலம் மாநகர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த காவல் ஆளிநர்கள் வரும் 9ஆம் தேதி காலை 11 மணி முதல் கோவை காவல் துறை ஆணையர் அலுவலகத்திலும் தங்கள் குறைகள் அடங்கிய மனுக்களை அளிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், திருச்சி புறநகர், கரூர், பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை, திருச்சி மாநகர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த காவல் ஆளிநர்கள் வரும் 10ஆம் தேதி காலை 10 மணி முதல் திருச்சி காவல் ஆணையர் அலுவலகத்திலும் - மதுரை புறநகர், விருதுநகர், திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, திருநெல்வேலி புறநகர், தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, மதுரை மாநகர், திருநெல்வேலி மாநகர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த காவல் ஆளிநர்கள் வரும் 10ஆம் தேதி மாலை 4 மணி முதல் மதுரை காவல் ஆணையர் அலுவலகத்திலும் தங்கள் குறைகள் அடங்கிய மனுக்களை அளிக்கலாம் எனக் காவல் துறை தலைமையகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:தயார் நிலையில் இருங்கள்! - ஐஜிக்கு டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு