குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்தி, அரசியலமைப்புச் சட்டப் பாதுகாப்பு இயக்கம் சார்பாக கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்தத் தலைவர் நல்லகண்ணு தலைமையில் சேப்பாக்கத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், திராவிடர் விடுதலை கழக நிறுவனர் கொளத்தூர் மணி, மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, எஸ்.டி.பி.ஐ. தலைவர் தெஹலான் பாகவி, இயக்குநர் கௌதமன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இதில் பேசிய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்தத் தலைவர் நல்லகண்ணு, "நாம் தொடர்ந்து போராட வேண்டும். இந்தச் சட்டத்தை திரும்பப் பெறவில்லை என்றால் பெரிய பாதிப்புகள் ஏற்படும். இந்த மண்ணில் பிறந்தவர்கள், வாழ்ந்தவர்கள் எல்லோரும் இந்திய குடிமக்கள்தான். இந்திய சுதந்திரப் போராட்டத்தில் அதிகம் போராடியது, சிறை சென்றது இஸ்லாமியர்கள்தான்.
விடுதலைக்காகத் தியாகம் செய்தது இஸ்லாமியர்கள். பாஜகவுக்கும் சுதந்திரப் போராட்டத்துக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. இன்று இஸ்லாமியர்களுக்குக் கொடுக்கும் இந்த நெருக்கடியை, நாளை கிறிஸ்தவர்களுக்கும் தமிழர்களுக்கும் பாஜக கொடுக்கலாம். கடைசியில் இந்தியாவிலுள்ள அனைத்து மக்களுக்கும் பாதிப்பு வரும்.
தமிழக தலைநகரை அதிர வைத்த குடியுரிமைத் திருத்தச் சட்ட எதிர்ப்பு போராட்டம் மோடி அரசுக்கு பொருளாதாரப் பிரச்னை குறித்த கவலையே இல்லை. இலங்கையிலுள்ள தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்க வேண்டும் என தற்போதுதான் அதிமுக கூறுகிறது. அதிமுக ஆதரிக்கவில்லை என்றால் இந்தச் சட்டம் நிறைவேறி இருக்காது. இந்தியாவில் நடப்பது ஹிட்லரின் நாசிச ஆட்சி இதனை முறியடிக்க பாடுபட வேண்டும்" என்று தெரிவித்தார்.
இந்நிகழ்வில் பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், "நாம் நடத்த போகிற போராட்டம் மிகப் பெரிய யுத்தம். தொலைநோக்குப் பார்வையுடன் பாஜக செயல்பட்டுவருகிறது. சிறுபான்மையினரை ஓரணியில் திரள அனுமதிக்கக்கூடாது என்பதற்காகக் குடியுரிமை திருத்தச் சட்டத்தில் கிறிஸ்தவர்களுக்குக் குடியுரிமை வழங்கி இருக்கிறார்கள்.
கிறிஸ்தவர்கள் போராட வேண்டிய தேவை இல்லை என்ற நிலையை உருவாக்கி இருக்கிறார்கள். இந்தியாவின் ஒரே இந்து மதத்தை கொண்டுவந்து, அரசியலமைப்பை நீர்த்துப்போகச் செய்வதே அவர்களின் நோக்கம். அதை மாற்ற வேண்டும் என்பதே அவர்கள் எண்ணம். அரசியலமைப்புச் சட்டத்தை மாற்றும்போது உள்நாட்டுப் போர் வந்தால், ராணுவ ஆட்சியைக் கொண்டு வருவார்கள்.
அதற்காகத்தான் முப்படைத் தலைமைத் தளபதி நியமிக்கப்பட்டுள்ளார்" என்று கூறினார். இந்நிகழ்வில் கலந்துகொண்ட அனைத்துத் தலைவர்களும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து தங்களின் கண்டன உரையைப் பதிவு செய்தனர்.