குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்தும் ஆதரித்தும் தமிழ்நாட்டிலுள்ள பல பகுதிகளில் நடைபெறும் போராட்டங்களால் மாணவ, மாணவிகள், பொதுமக்கள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதாகவும், காவல் துறை அனுமதியில்லாமல் போராடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் தொடரப்பட்ட வழக்குகள் இன்று நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது போராட்டத்திற்கு ஆதரவாக மனு தாக்கல் செய்திருந்த வழக்கறிஞர்கள், ஜனநாயக அமைப்பில் போராட்டம் என்பது அடிப்படை உரிமை என்று வாதிட்டனர்.
இந்த வழக்கில் காவல் துறை தரப்பில் ஆஜராகியிருந்த தமிழ்நாடு அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஏ. நடராஜனிடம் போராட்டத்தின் தற்போதைய நிலை என்ன என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
அதற்குப் பதிலளித்த குற்றவியல் தலைமை வழக்கறிஞர், பெரும்பாலான இடங்களில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போரட்டங்கள் விலக்கிக் கொள்ளபட்டுள்ளதாகவும், தமிழ்நாட்டில் சில பகுதிகளில் இன்னும் போராட்டம் தொடர்வாதாகவும் தெரிவித்தார்.
அப்போது நீதிபதிகள், தற்போது கோவிட்-19 வைரஸ் பரவுவதைத் தடுக்கப் பொது இடங்களில் கூடுவதை தவிர்க்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகள் பொதுமக்களுக்கு கேட்டுக்கொண்டுள்ளது என்றும், எனவே இதை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் தெரிவித்தனர்.
தற்போதைய நிலையில் பொது இடங்களில் அதிக அளவில் மக்கள் கூடி ஆர்ப்பாட்டம், போராட்டம் உள்ளிட்டவற்றை நடத்த காவல் துறையும், தமிழ்நாடு அரசும் அனுமதி அளிக்கக் கூடாது என்று உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை ஏப்ரல் 21ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க: கோவிட் 19 அச்சுறுத்தல் -19.30 லட்சம் முகக்கவசங்கள் இருப்பு