சென்னை:மன்னார் வளைகுடாவில் நிலை கொண்டிருந்த 'புரெவி' புயல் வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக நிலை கொண்டுள்ளது என, சென்னை வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
வலுவிழந்தது புரெவி புயல்
20:15 December 03
இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில்,"மன்னார் வளைகுடாவில் நிலை கொண்டுள்ள புரெவி புயல், தற்போது பாம்பனுக்கு தென் மேற்கே சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது. இது தொடர்ந்து மேற்கு, தென் மேற்கு திசையில் நகர்ந்து ராமநாதபுரத்திற்கும், தூத்துக்குடிக்கும் இடைப்பட்ட பகுதியை இன்று(டிச.3) இரவு அல்லது நாளை(டிச.4) அதிகாலை கரையை கடக்கக்கூடும்.
இதுதொடர்ந்து அடுத்து வரும் 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கக்கூடும். இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் பரவலாக மழை பெய்யக்கூடும். ஒரு சில இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும். காற்றின் வேகத்தை பொறுத்தவரை மன்னார் வளைகுடா மற்றும் தென் தமிழக கடலோரப் பகுதிகளில் பலத்த காற்றானது, மணிக்கு 50 முதல் 60 கி.மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். தென் மற்றும் மத்திய தமிழக பகுதிகளில் கன மழை பெய்யக்கூடும்" என்றார்.