சென்னை: மரபணுவின் மூலம் மார்பக புற்றுநோய் வருவதையும் தடுப்பதற்கான பரிசோதனைகளை முன்கூட்டியே செய்தால் தடுக்க முடியும் என கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் சாந்திமலர், மருத்துவர் அனிதா தெரிவித்தனர்.
புற்றுநோய் என்பது அசாதாரண உயிரணுப் பிரிவால் வகைப்படுத்தப்படும் மோசமான நோய். உடலில் உள்ள கோடிக்கானக்கான செல்களில் ஆரோக்கியமான செல்கள் உடலின் தேவைக்கேற்ப வளர்ந்து பிரிவதுடன், நாம் வயதாகும்போது அல்லது சேதம் ஏற்படுகையில், இந்த செல்கள் இறந்து புதிய செல்களால் உருவாக்கப்படுகின்றன. புற்றுநோய் ஒருவருக்கு வந்தால், பழைய மற்றும் சேதமடைந்த செல்களை அழிப்பதற்கு பதிலாக, அவை தேவையில்லாதபோதும் உயிர் வாழ்ந்து புதிய செல்களை உருவாக்குகின்றன. அவ்வாறு வளரும் கூடுதல் செல்கள் கட்டுப்பாடு இல்லாமல் பிரிந்து கட்டிகளை ஏற்படுத்துகின்றன.
எல்லா கட்டிகளும் புற்றுநோயாகாது:பெண்களை அதிகமாக பாதிக்கும் நோய்களில் மார்பக புற்றுநோயும் இடம் பெற்றுள்ளது. ஆரம்ப கட்டத்தில், மார்பக புற்றுநோய் எந்த அறிகுறிகளையும் காட்டாது. மார்பகங்களில் கண்ணுக்கு தெரியும் மாற்றங்கள் ஏற்பட்டாலோ அல்லது மார்பில் கட்டி போல உறுதியாக தோன்றினால் கூட, புற்றுநோய் பாதிப்பாக இருக்குமோ என்ற சந்தேகம் பெரிதாகத் தோன்றாது. ஆனாலும், மார்பக புற்றுநோயாளிகளில் பலருக்கு கட்டி இருப்பது உண்மைதான் என்றாலும், எல்லா கட்டிகளும் புற்றுநோயாக இருப்பது இல்லை. இதனால், பிற அறிகுறிகளையும் அறிந்து கொள்வதுடன், பரிசோதனைகளை ஆரம்பக்கட்டத்திலேயே மருத்துவர்களின் ஆலோசனைப் படி செய்து, சிகிச்சை பெறுவதும் சிறந்ததாகும்.
அறிகுறிகளும் எச்சரிக்கையும்:மார்பக புற்றுநோயின் அறிகுறிகளில் மிகவும் பொதுவான எச்சரிக்கை மார்பு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஏற்படும் கட்டி. இது உங்கள் மார்புச் சுவருடன், அக்குள் பகுதி வரை ஏற்படலாம். மார்பகங்களில் முலைக்காம்பில் இரத்தப்போக்கு அல்லது வலி ஏற்படலாம். மார்பகத்தின் எந்தப் பகுதியிலும் சிவந்து போதல் அல்லது வீக்கம் இருக்கலாம்.
மார்பகத்தில் வலியற்ற கட்டி பொதுவாக மார்பக புற்றுநோயின் முதல் அறிகுறியாகும். அதற்கு பதிலாக, ஸ்கிரீனிங் மேமோகிராம் மூலம் பல கட்டிகள் கண்டறியப்படுகின்றன. நோயறிதலின் போது, பெரும்பாலான பெண்களுக்கு மார்பக புற்றுநோயின் வெளிப்படையான அறிகுறிகள் இல்லை.சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் ரேடியோலாஜித்துறையில் பெண்களுக்கு ஏற்படும் மார்பக புற்றுநோயை கண்டறிவதற்கான மேமோகிராம் கருவி பொருத்தப்பட்டு, பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு: இதுகுறித்து நேற்று (அக்.9) கீழ்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் மருத்துவர் சாந்திமலர் ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திடம் அளித்த பேட்டியில், 'அக்டோபர் மாதம் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாக அனுசரிக்கப்படுகிறது. பெண்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். 40 வயதிற்கு மேற்பட்ட பெண்களில் 600 முதல் 650 பேரை கடந்தாண்டு பரிசோதனை செய்த போது, 21 பேருக்கு மேமோகிராம் மூலம் கண்டறியப்பட்டது. அவர்களுக்கு முதலில் தசை பரிசோதனை மூலம் உறுதி செய்யப்பட்டு, அதன் பின்னர் அவர்களின் நோயின் தன்மைக்கு ஏற்ப சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகிறது.
நடப்பாண்டில் பொது அறுவை சிகிச்சை துறையின் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். பெண்களுக்கு ஹார்மோன்களில் ஏற்படும் மாற்றத்தினால், மார்பகங்களில் கட்டிகள் இருக்கும். அதனை கண்டு சிலர் பயப்படுவார்கள். சிலர் வழக்கமாக வரும் கட்டி என கருதுவார்கள். அது போன்று இல்லாமல் அவர்களாவே சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். மாற்றங்கள் தெரிந்தால் அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்று ஆலோசனைப் பெற்று சிகிச்சை பெறலாம்.