சென்னை: மக்கள் நல்வாழ்வுத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
கறுப்புப் பூஞ்சைக்கு சிகிச்சை அளிக்க மருத்துவ வல்லுநர்கள் குழு! - கருப்பு பூஞ்சை
தமிழ்நாட்டில் கறுப்புப் பூஞ்சை நோய் குறித்து ஆராய்வதற்கும், அதனைத் தடுப்பதற்கும், சிகிச்சை அளிப்பதற்கும் மருத்துவக்கல்வி இயக்குநர் தலைமையில் 13 பேர் கொண்ட குழு அமைத்து மக்கள் நல்வாழ்வுத்துறைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.
அதில், 'தமிழ்நாடு அரசு கறுப்பு பூஞ்சை நோயைக் கண்டறிந்து சிகிச்சை அளிப்பதற்கும், அதனைத் தடுப்பதற்கும் மருத்துவ வல்லுநர்கள் குழுவினை அமைத்துள்ளது. இந்தக் குழுவினர் சிகிச்சையில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராய்ந்து அரசிற்கு ஆலாேசனை வழங்குவார்கள்.
இந்தக் குழுவின் தலைவராக மருத்துக்கல்வி இயக்குநரும், உறுப்பினர்களாக மருத்துவர்கள் மோகன் காமேஸ்வரன், பாபு மனோகர், மோகன்ராஜன், சுப்பிரமணியன் சுவாமிநாதன், ராமசுப்பிரமணியன், அனுபாமா நித்யா, பாலாஜி, இயக்குநர் - மருத்துவ சேவைப் பணிகள் கழகம், பொது சுகாதாரத்துறை இயக்குநர், சென்னை மருத்துவக் கல்லூரியின் காது, மூக்கு தொண்டைப் பிரிவின் தலைவர், சென்னை மருத்துவக் கல்லூரியின் மைக்ரோ பயோலோஜி துறைத் தலைவர் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்' என்று கூறப்பட்டுள்ளது.