தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

கறுப்பு பூஞ்சை பாதிப்பு: மருத்துவமனையில் 518 பேர் சிகிச்சை! - அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு

தமிழ்நாட்டில் கறுப்பு பூஞ்சை தொற்றால் பாதிக்கப்பட்டு, 518 பேர் சிகிச்சைப் பெற்று வருவதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

கறுப்பு பூஞ்சை பாதிப்பு
கறுப்பு பூஞ்சை பாதிப்பு

By

Published : Jun 1, 2021, 9:29 PM IST

சென்னை: ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவரும் கரோனா நோயாளிகள் நிலை குறித்த அறிவிப்பு பலகையை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் திறந்து வைத்தார்.

பின்னர் கறுப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டவர்களை கண்டறியும் ஸ்கிரீனிங் மையம் மற்றும் புறநோயாளிகள் பிரிவினை திறந்து வைத்தார். தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர், "கறுப்பு பூஞ்சை கண்டறிதல் மற்றும் புற நோயாளிகள் பிரிவு புது முயற்சியாக இன்று (ஜூன்.1) தொடங்கப்பட்டுள்ளது.

இங்கு கறுப்பு பூஞ்சை தொடர்பாக அனைத்து வகைப் பரிசோதனைகள் மேற்கொள்ள வேண்டிய தேவையான மருத்துவர்கள் மற்றும் வசதிகள் ஒரே இடத்தில் வழங்க, இந்த மையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கறுப்பு பூஞ்சை நோயினை ஆரம்ப நிலையில் கண்டறிவது அவசியம் என்பதால், சிறப்பு ஏற்பாடாக இந்த மையம் திறக்கப்பட்டுள்ளது. இதேபோல் அனைத்து மாவட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில், சிறப்பு மையங்கள் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

கறுப்பு பூஞ்சை நோயால் இதுவரை தமிழ்நாட்டில், 518 நபர்கள் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இதுவரை 17 நபர்கள் உயிரிழந்துள்ளனர். மாசுபட்ட தண்ணீரை ஆக்சிஜன் உடன் பயன்படுத்துவது காரணமாகக் கூட கறுப்பு பூஞ்சை ஏற்படலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

இதனை வல்லுநர் குழு ஆராய்ந்து வருகிறது. கறுப்பு பூஞ்சை சிகிச்சைக்குத் தேவையான மருந்துகள் மத்தியத் தொகுப்பில் இருந்து வருகிறது. தேவைகள் அதிகமுள்ள சூழ்நிலையில் குறைவான எண்ணிக்கையில் மருந்துகள் ஒதுக்கப்படுவதால், தினமும் தேவையான எண்ணிக்கையில் மருந்துகளை ஒதுக்க கேட்டுள்ளோம்.

ஜூன் மாதம் 42 லட்சம் தடுப்பூசி மத்தியத் தொகுப்பில் இருந்து வர இருக்கிறது. கரோனா சிகிச்சைக்குத் தனியார் மருத்துவமனைகள் அதிக கட்டணம் வசூலித்தால் சுகாதாரத் துறையின் கீழ் செயல்படும் அமலாக்கப்பிரிவு மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

இந்த நிகழ்வில், அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, மத்திய சென்னை மக்களவை உறுப்பினர் தயாநிதி மாறன், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

ABOUT THE AUTHOR

...view details