சென்னை: இந்தியாவின் உயர் அதிகாரம்மிக்க குடியரசுத் தலைவர் பதவிக்கு, முதன்முறையாக பழங்குடியினத்தைச் சேர்ந்த மலையகப் பெண்மணியான திரௌபதி முர்முவுக்கு பாரதிய ஜனதா கட்சியின் கூட்டணி அரசால் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.
இந்நிலையில் பாஜக மாநிலத்துணைத் தலைவர் வி.பி.துரைசாமி இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், 'சுதந்திரம் பெற்ற காலத்திலிருந்து இரண்டாவது முறையாக ஒரு பெண்மணிக்கும் முதல்முறையாக பட்டியல் இனத்தைச் சேர்ந்த வாய்ப்பு மறுக்கப்பட்ட மலையகத்தைச் சேர்ந்தவருக்கும் குடியரசுத் தலைவராக போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. திராவிட மாடல், திராவிட மாடல் என்று அடிக்கடி கூறிக் கொண்டிருக்கும் தமிழ்நாடு முதலமைச்சர், ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும் பட்டியல் இனத்தவருக்கும், குரல் கொடுக்கும் ஒரே இயக்கம் என்று தன்னை தானே வியந்து சொல்லிக் கொள்வது வழக்கம்.
தமிழ்நாடு முதலமைச்சரே, உங்களின் சமூக நீதிக் கொள்கையை நிரூபிக்க உங்களுக்கு அருமையான வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. பிற்படுத்தப்பட்ட மக்களுக்காகப் பட்டியல் இனத்திற்காகப் பாடுபடுவோம் என்று வாயால் மட்டும் வடை சுட்டுக் கொண்டிருக்காமல், பட்டியல் இனத்தின் மலை சாதியினப் பெண்மணிக்கு வாக்களித்து உங்களின் சமூகநீதியை நிலைநாட்டி காட்டவேண்டும்.
தாங்கள் பெரியாரின் நினைவிடத்திற்கு வேண்டுமானால் ஒரு முறை சென்று வாருங்கள். அண்ணாவின் நினைவிடத்திலும் அரைமணி நேரம் சென்று வாருங்கள். ஏன் கலைஞரின் நினைவிடத்திலும் சென்று கேட்டுப்பாருங்கள். சமூக நீதி குறித்து அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை தெரிந்து கொண்டு வாருங்கள்.